டில்லி
காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவை கண்டுபிடிக்க வைகோ அளித்த ஆட்கொணர்வு மனுவை அவசர மனுவாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.
கடந்த மாதம் 5 ஆம் தேதி மத்திய அரசு விதி எண் 370ஐ விலக்கி காஷ்மீருக்கு அளித்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது. அத்துடன் அந்தப் பகுதி இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்படும் என அறிவித்தது. இதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் பல தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. முன்னாள் முதல்வர்கள் உள்ளிட்ட பல எதிர்க்கட்சி தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.
நேற்று உச்சநீதிமன்றத்தில் மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ ஒரு ஆட்கொணர்வு மனுவை அளித்துள்ளார். அந்த மனுவில், “மதிமுக சார்பில் சென்னையில் அண்ணா பிறந்த நாள் விழா மாநாடு வரும் 15ஆம் தேதி நடக்க உள்ளது.
அதற்கு பல்வேறு தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். விழாவில் கலந்துக் கொள்வதாக ஒப்புக் கொண்ட முன்னாள் காஷ்மீர் முதல்வர் ஃபரூக் அப்துல்லா எங்குள்ளார் என்பது தெரியவில்லை. எனவே அவரை உடனடியாக கண்டுபிடிக்க வேண்டும்” என வைகோ தெரிவித்திருந்தார்.
மேலும் வைகோ தரப்பில் அளிக்கப்பட்டுள்ள இந்த மனுவை அவசர மனுவாக விசாரிக்க உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை எழுப்பப்பட்டது. உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு வைகோவின் ஆட்கொணர்வு மனுவை அவசர மனுவாகக் கருதி உடனடியாக விசாரிக்க மறுத்துள்ளது அத்துடன் இந்த மனு எப்போது விசாரிக்க வேண்டும் என்பதைத் தலைமை நீதிபதி முடிவு செய்வார் என அமர்வு அறிவித்துள்ளது.