கலிஃபோர்னியா
ஆப்பிள் நிறுவனம் தனது புதிய மொபைலான ஐஃபோன் 11, 11 ப்ரோ, 11 ப்ரோ மாக்ஸ் ஆகிய மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.
தற்போது மொபைல் சந்தையில் புதிய மாடல்களுக்கு நல்ல கிராக்கி இருந்து வருகிறது. குறிப்பாக சாம்சங், ஒன் பிளஸ் ஆகிய நிறுவனங்களின் மொபைல்கள் விலை குறைவாக உள்ளதால் பலரையும் கவர்ந்து வருகிறது. உலகின் மிக அதிகமாக விற்பனையாகும் மொபைல்களில் ஒன்றான ஆப்பிள் நிறுவன ஐஃபோன் வகை மொபைல்களின் விற்பனை இதனால் சற்றே குறைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகின்றன. இதற்கு ஆப்பிள் ஐஃபோன்கள் விலை அதிகமாக உள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆண்டுதோறும் ஆப்பிள் நிறுவனம் புதிய ஐஃபோன்களை அறிமுகம் செய்வது வழக்கமாகும் அவ்வகையில் கலிஃபோர்னியாவில் நடந்த ஒரு நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் தனது ஐஃபோன் 11 வகை மொபைல்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஐஃபோன் 11 வகை மொபைல்கள் ஐஃபோன் 11, ஐஃபோன் 11 ப்ரோ மற்றும் ஐஃபோன் 11 ப்ரோ மாக்ஸ் ஆகிய மூன்று வகைகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
இந்த ஐஃபோன் 11 மொபைல்களில் முந்தைய அறிமுகமான ஐஃபோன் எக்ஸ் ஆரை விடச் சிறப்பு அம்சங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஐஃபோன் 11 இன் 6.1 அளவு திரை கொண்டதாகும். இதில் ஏ 13 சிப் பொருத்தப்பட்டுள்ளதால் இந்த வகை மொபைல் மிகவும் வேகமான செயல்பாடு உடையதாகும். முக்கியமாக எக்ஸ் ஆர் மாடலில் இரு காமிராக்கள் உள்ள நிலையில் இந்த ஐஃபோன் 11 ப்ரோ மற்றும் ப்ரோ மாக்ஸ் மாடல்களில் மூன்று காமிரக்கள் உள்ளன..
இந்த மூன்று காமிராக்களில் ஒன்றில், வைட் ஆங்கிள் லென்ஸும், மற்றொன்றில் 120 டிகிரியை முழுமையாகத் திரைக்குள் கொண்டுவரும் வகையில் மிக அதிக வைட் ஆங்கிள் லென்ஸையும் கொண்டுள்ளது. மூன்றாவது டெலிபோட்டோ லென்ஸையும் கொண்டுள்ளது. இதில் முக்கிய அம்சமாக இரவு நேரத்தில் எடுக்கப்படும் புகைப்படங்கள் துல்லியமாக அமைய நைட் மோட் உள்ளது. இந்த காமிராவில் எடுக்கப்படும் வீடியோக்கள் 4 கே தரத்தில் இருக்கும்.
முக்கியமாக முந்தைய மாடலை விட ஐஃபோன் 11 பேட்டரி மேலும் 1 மணி நேரம் அதிகமாகச் செயல்பட உள்ளது. அது மட்டுமின்றி ஆப்பிள் நிறுவனம் தனது ஐஃபோன்11 மாடல்களில் சீக்கிரமாக சார்ஜ் செய்யும் வசதியையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த ஐஃபோன்களில் ஒலியை டால்பி அட்மாஸ் முறையில் அனுபவித்து மகிழ முடியும்.
இந்த ஐஃபோன் 11 மாடல்கள் 64 ஜிபி, 128 ஜிபி மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ்களுடன் உள்ளன. இவற்றின் விலை ரூ.69,400 முதல் தொடங்குகிறது. இந்த ஐஃபோன் 11 ஆப்பிள் முகவர்களிடம் வரும் 27 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. ஐஃபோன் 11 பர்ப்பிள் ஆறு நிறங்களில் அதாவது ஊதா, பச்சை, மஞ்சள், கருப்பு, வெள்ளை மற்றும் சிவப்பு நிறங்களில் வருகின்றன.