ஷார்ஜா: ஐசிசி வெளியிட்ட டெஸ்ட் பேட்ஸ்மென்களுக்கான தரவரிசைப் பட்டியலில், இந்திய கேப்டன் விராத் கோலி இரண்டாவது இடத்தில் நீடிக்கிறார்.
இப்பட்டியலில் பலரும் ஊகிக்கும் வகையில் முதலிடத்தில் நீடிப்பது ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித். அவர் பெற்றுள்ள புள்ளிகள் 937. விராத் கோலி பெற்றுள்ள புள்ளிகள் 903.
மூன்றாவது இடத்தில் 825 புள்ளிகளுடன் அமர்ந்திருப்பவர் நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன். இந்தியாவின் புஜாரா நான்காவது இடத்திலும், ரஹானே ஏழாவது இடத்திலும் உள்ளனர்.
டெஸ்ட் பந்துவீச்சாளர் பட்டியலில், ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ் முதலிடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தில் தென்னாப்பிரிக்காவின் ரபாடாவும், மூன்றாவது இடத்தில் இந்தியாவின் பும்ராவும் அமர்ந்துள்ளனர். ஆஸ்திரேலியாவின் ஹேசல்வுட் 12வது இடத்திலிருந்து எழுந்துவந்து 8வது இடத்தில் அமர்ந்துகொண்டார்.
ஆல்ரவுண்டர்களுக்கான பட்டியலில் மேற்கிந்திய தீவுகள் கேப்டன் ஜேஸன் ஹோல்டர் முதலிடத்தில் நீடிக்க, இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜாவோ, நான்காவது இடத்திலிருந்து மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.