காபூல்

ப்கானிஸ்தானில் தாலிபான்களுடனான பேச்சு வார்த்தையை அமெரிக்க அதிபர் டிரம்ப் ரத்து செய்தது கடும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்க ராணுவம் தொடர்ந்து ஆப்கானிஸ்தானின் தீவிர வாதிகளான தாலிபன் மற்றும் ஐ எஸ் குழுக்களுக்கு எதிராக போரிட்டு வருகிறது.  இந்த பகுதி மிகவும் அடர்ந்த மலைப்பிரதேசம் என்பதால் அமெரிக்க ராணுவத்தினரால் தீவிரவாதிகளை முழுமையாக அழிக்க முடியவில்லை.   இந்த தீவிரவாதிகளை ஒடுக்க சுமார் 11,000க்கும் மேற்பட்ட அமெரிக்க  வீரர்கள் ஆப்கனில் முகாமிட்டுள்ளனர்.   இந்தப் போர் ஒரு முடிவுக்கு வராமல் உள்ளது.

முடிவடையாத தொடர் போரினால் அமெரிக்க வீரர்கள் கடும் சலிப்பு அடைந்துள்ளனர்   அத்துடன் ஆப்கனிலும் இந்த நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு கடுமையாக உள்ளது.   இதனால் அமெரிக்க அதிபர் டிரம்ப் தாலிபன்களுடன் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி சரண் அடைய வைக்க முயற்சி செய்து வருகிறார்.    இந்த பேச்சுவார்த்தைக்காக அமெரிக்க அதிபர் தூதர் ஒருவரை நியமித்து அவர் மூலம் பேச்சு வார்த்தை நடத்தி வந்தார்.

இந்தப் பேச்சு வார்த்தை ஓரளவு  சுமுகமான முன்னேற்றத்தைக் கண்டதால் டிரம்ப் மற்றும் தாலிபன் தலைவர்கள் கலந்து ரகசியப் பேச்சு வார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது.   இந்தக் கூட்டம் நேற்று இரவு நடக்க இருந்தது.  இந்நிலையில் காபூல் நகரில் தாலிபன் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 11 பேர் மரணம் அடைந்தனர்.  அதில் ஒருவர் அமெரிக்க வீரர் ஆவார்.

அமெரிக்க அதிபர் இதனால் கோபமடைந்து, “தற்போது பேச்சு வார்த்தைகள் நடைபெற உள்ளன.  இந்நிலையில் தாலிபான்கள் தாக்குதல் நடத்துவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.  எனவே நான் இந்த பேச்சு வார்த்தையை ரத்து செய்கிறேன்” என அறிவித்தார்.   இது தாலிபன்களிடையே கடும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து தாலிபன்தீவிரவாதிகளின் செய்தி தொடர்பாளர் சப்துல்லா முஜாகித், “அமெரிக்க அதிபரின் பேச்சு வார்த்தையின் போது இருதரப்பினரும் ஒரு அமைதி ஒப்பந்தத்தில்   கையெழுத்திட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.  இந்நிலையில் அமைதிப் பேச்சு வார்த்தையை டிரம்ப் ரத்து செய்துள்ளார்.  இதனால் அமெரிக்காவின் நன்மதிப்பு கெடுவதோடு பல உயிர்கள் மற்றும் சொத்துக்களுக்கு கடும் சேதம் ஏற்படும்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.