கவுகாத்தி
சட்டவிரோதமாகக் குடியேறி உள்ள அனைவரும் வெளியேற்றப்படுவார்கள் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த விதி எண் 370 ஐ கடந்த மாதம் 5 ஆம் தேதி மத்திய அரசு விலக்கிக் கொண்டது, அதையொட்டி அம்மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. அதைப் போல் வடகிழக்கு மாநிலங்களுக்கு விதி எண் 371 மூலம் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டிருந்தது. அந்த விதியும் விலக்கப்படலாம் என அம்மாநிலங்களில் அச்சம் எழுந்தன.
தற்போது வெளியான அசாம் குடியுரிமைப் பட்டியலில் பலருடைய பெயர்கள் இல்லாதது அந்த அச்சத்தை அதிகரித்துள்ளது. கடந்த 31 ஆம் தேதி வெளியான இந்தப் பட்டியலில் சுமார் 19 லட்சம் பேர் பெயர்கள் இடம் பெறவில்லை. அசாம் மாநிலத்தில் பாஜக வென்றுள்ள 14 மக்களவை தொகுதிகளிலும் அசாம் மாநில இந்துக்கள், வங்க மொழி இந்துக்கள் மற்றும் பழங்குடியினர் அதிகம் உள்ளனர்.
எனவே இங்கு அதிகமாக உள்ள சிறுபான்மை இன மக்களை கவர்வது பாஜக அரசுக்கு முக்கியமான ஒன்றாக உள்ளது. அதையொட்டி இந்த பகுதிகளில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டு நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். இது அவர் உள்துறை அமைச்சர் பதவி ஏற்ற பிறகு அசாம் மாநிலத்தில் மேற்கொள்ளும் முதல் சுற்றுப்பயணம் ஆகும்.
அமித்ஷா, “நான் பாராளுமன்றத்தில் ஏற்கனவே விதி எண் 371 விலக்கைக் கொள்ளப்பட மாட்டாது என உறுதி அளித்துள்ளேன். காஷ்மீர் நிலை வேறு. வடகிழக்கு மாநிலங்கள் நிலை வேறு. எனவே மக்கள் யாரும் விதி எண் 371 நீக்கப்படலாம் என்னும் அச்சத்தைக் கைவிட வேண்டும். அதற்கும் தேசிய குடியுரிமைப் பட்டியலுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.
தேசிய குடியுரிமைப் பட்டியல் என்பது சட்டவிரோதமாகக் குடியேறியவர்களைக் கண்டறிய உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவினுள் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் அனைவரும் விரைவில் வெளியேற்றப்படுவார்கள். இது உறுதியாகும்” எனத் தெரிவித்துள்ளார்.