நிலவில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட சந்திரயான் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், “நிலவின் தென்துருவ பகுதியை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் 2 விண்கலத்துடன், விக்ரம் எனப்படும் லேண்டர் சேர்க்கப்பட்டு, அனுப்பி வைக்கப்பட்டது. இது சில தினங்களுக்கு முன்பு விண்கலத்தில் இருந்து பிரிந்து நிலவை நோக்கி நகர்ந்தது. நிலவின் தரைதளத்திற்கு 2.1 கி.மீட்டர் தூரத்தற்கு முன்னதாக, விக்ரம் லேண்டர் உடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இது தொடர்பாக பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டிருந்தோம். தற்போது தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட விக்ரம் லேண்டர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
லேண்டர் விக்ரம் கண்டறியப்பட்ட போதிலும், இன்னும் எங்களுக்கு தகவல் தொடர்புகள் எதுவும் கிடைக்கவில்லை. விக்ரம் லேண்டருடனான தொடர்புகளை மேம்படுத்தி, தகவல்களை பெற நாங்கள் முயற்சித்து வருகிறோம்” என்று தெரிவித்தார்.