சென்னை:
சென்னை விமான நிலையம் அருகே பரங்கிமலைப் பகுதியில் ராணுவ பயிற்சி மையம் உள்ளது. இங்கு பயிற்சி பெற்ற ராணுவ வீரர்களின் பயிற்சி நிறைவை ஒட்டி சாகச நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
பரங்கிமலையில் ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் 11 மாத ராணுவ பயிற்சிக்கு 230 ஆண்கள், 33 பெண்கள் மற்றும் 16 வெளிநாட்டு வீரர்கள் என மொத்தம் 279 பேர் சேர்ந்து பயிற்று பெற்று வந்தனர். இந்த பயிற்சி மையத்தில் மட்டும்தான் பெண்களுக்கென சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அது தொடர்பான தேர்வுகளும் நடத்தப்படுகின்றன.
இவர்களின் 11 மாத கால பயிற்சி நிறைவு பெற்றுள்ளது. பயிற்சி முடிவடைந்ததைத் தொடர்ந்து, நேற்று பயிற்சி மையத்தில், பல்வேறு சாகச நிகழ்ச்சிகளை செய்து காட்டினர். இந்த சாகச நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மேஜர் ஜெனரல் சஞ்சீவ் கனல் கலந்து கொண்டார்.
இந்த சிறப்பு விழாவில், ராணுவத்தில் பணியில் சேர உள்ள வீரர்களின் குடும்பத்தினர் ஏராளமானோர், கலந்து கொண்டனர். பயிற்சி முடித்த வீரர்கள் இந்த நாளுக்காக ஆர்வத்துடன் காத்துக்கொண்டிருந்த தாக தெரிவித்தனர்.
நாட்டுக்கு சேவை புரிவதை ஒவ்வொரு ராணுவ வீரனும் பெருமையாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நிறைவு விழாவில் கலந்து கொண்ட ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.