டில்லி:
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டும், கார்த்தி சிதம்பரம் முன்ஜாமின் பெற்றும் உள்ள நிலையில், ஏர்செல்-மேக்சிஸ் முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு டில்லி சிபிஐ நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கி உள்ளது.
மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியின்போது, மத்திய நிதியமைச்சராக ப. சிதம்பரம் இருந்தார். அப்போது, ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்தத்துக்கு வெளி நாட்டு முதலீட்டு ஊக்குவிப்பு வாரிய ஒப்புதலைப. சிதம்பரம் கடந்த 2006ம் ஆண்டு வழங்கினார்.
ரூ.3,500 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளிக்கும் அதிகாரம் பொருளாதார விவகாரங்களுக்கான கேபினெட் குழுவுக்கு மட்டுமே உள்ள நிலையில், ப. சிதம்பரம் எப்படி வெளிநாட்டு முதலீட்டு ஊக்குவிப்பு வாரிய ஒப்புதலை அளித்தார்? என்று கேள்வி எழுப்பப்பட்டது. இந்த ஒப்பந்தம் தொடர்பாக அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆதாயம் அடைந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் தனித்தனியே வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கு தொடர்பாக தாங்கள் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில், தற்போது ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ காவலில் உள்ள ப. சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் முன்ஜாமீன் கோரி டில்லி சிபிஐ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு இன்றைய விசாரணையைத் தொடர்ந்து, ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோர் இந்தியாவை விட்டு செல்லக் கூடாது என்ற நிபந்தனையுடன் சிபிஐ நீதிபதி ஓ.பி.சைனி முன்ஜாமீன் வழங்கினார். மேலும் இருவரும் தலா ரூ 1 லட்சம் பிணைத்தொகை வழங்கவும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.