டில்லி:

ம்மு காஷ்மீரில் இன்னும் 15நாளில் தொலைதொடர்பு சீராகும் என்று தன்னை சந்தித்த ஜம்மு காஷ்மீர் கிராமத்தலைவர்களிடம் அமித்ஷா உறுதி அளித்தார். மேலும் அவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் இன்சூரன்ஸ் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு தொலை தொடர்பு வசதிகள், சமுக வலைதளங்கள், இணைய சேவை முடக்கப்பட்டு உள்ளன. மேலும் பல மாவட்டங்களில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது.

இந்த நிலையில், தன்னை சந்தித்த ஜம்மு காஷ்மீர் தூத்துக்குழுவினருடன், இன்னும் 15 நாட்களில் தொலைத்தொடர்வு சேவைகள் மீண்டும் நடைமுறைக்கு வரும் என்று உறுதி அளித்தார்.

கடந்த மாதம் 5ந்தேதி (ஆகஸ்டு)  ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவான இந்திய அரசியலமைப்பின் 370 வது பிரிவை மத்தியஅரசு ரத்து செய்து மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. அன்று முதல், அங்கு தகவல் தொடர்பு மற்றும்  இணைய சேவைகள் முடக்கப்பட்டன.

அரசின் இந்த நடவடிக்கை காரணமாக பள்ளத்தாக்கு பகுதியில் வசிப்பவர்கள் தங்களது சொந்த பந்தங்களை  தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.  மேலும், தொலைத்தொடர்பு சேவையை பயன்படுத்தி பயங்கரவாதிகள் தீங்கு இழைக்க வாய்ப்பு உள்ளதாகவும், இந்த நடவடிக்கை உயிர்களை காப்பாற்ற உதவுகிறது என்றும்  மத்தியஅரசு விளக்கம் அளித்தது.

தற்போது அங்கு நிலமை சீரடைந்து வரும் நிலையில், காஷ்மீர் மாநிலத்தை நிர்வகித்து வரும், அதிகாரிகளான  நித்யானந்த ராய், உள்துறை செயலாளர் ஏ.கே.பஹ்ல்லா, கூடுதல் செயலாளர்  ஜைனேஷ்குமார், மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் செர்ந்த கிராமங்களின் தலைவர்கள் இன்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினார்.

அப்போது, துண்டிக்கப்பட்ட விரைவில் தொலைத்தொடர்பு சேவையை மீண்டும் வழங்க வேண்டும் என்று அவர்கள் அமைச்சரிடம் வலியுறுத்தினர். அதை ஏற்றுக்கொண்ட அமித்ஷா, இன்னும் 15 நாட்களுக்குள் தொலைத்தொடர்பு சேவைகள் வழங்கப்பட்டு விடும் என்று உறுதி அளித்தார்.

மேலும்,  அவர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, பஞ்சாயத்து மற்றும் கிராம தலைவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு மற்றும் ரூ. 2 லட்சம் காப்பீடு வழங்கப்படும் என அமித்ஷா உறுதி அளித்தார்.

இது தொடர்பாக குப்வாரா மாவட்டத்தை சேர்ந்த கிராம பஞ்சாயத்து தலைவர் மிர் ஜூனையாத் கூறுகையில், எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தோம். இதனை ஏற்று கொண்ட அவர், பாதுகாப்பு வழங்கப்படும். காஷ்மீரில் நிலைமை சீரானதும், ஏற்கனவே அளித்த உறுதிப்படி, காஷ்மீருக்கு முழு மாநில அந்தஸ்து வழங்கப்படும் என அமித்ஷா தெரிவித்தார்.