மாமல்லபுரம்

மாமல்லபுரத்தில் அடுத்த மாதம் இந்திய பிரதமருக்கும் சீன அதிபருக்கும் இடையில் ஆன சந்திப்பு நடைபெற உள்ளது.

இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையே இரு நாட்டு உறவுகளை மேம்படுத்துவது குறித்து பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. கடந்த ஆண்டு இதன்  முதல் கட்டமாகச் சீனாவில் ஷகான் நகரில் நடந்த சந்திப்பில் இந்தியப் பிரதமர் மோடியும் சீன அதிபர் ஜீ ஜிம்பிங் ஆகிய இருவரும் கலந்துக் கொண்டு பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அந்த சந்திப்பில் இரு நாட்டு உறவுகளைச் சர்வதேச நிலைமைக்கு ஏற்ப மேம்படுத்துவது குறித்துப் பேசினார்கள்.

 

அந்த சந்திப்பின் போது அடுத்த கட்ட பேச்சு வார்த்தையை இந்தியாவில் நடத்த வருமாறு பிரதமர் மோடி சீன அதிபருக்கு அழைப்பு விடுத்தார். மோடியின் அழைப்பைச் சீன அதிபர் ஏற்றுக் கொண்டு இந்தியா வர உள்ளதாகச் செய்திகள்  வெளியாகின. தற்போது அந்த சந்திப்பு வரும் அக்டோபர் 11 முதல் 13 ஆம் தேதி வரை தமிழகத்தில் சென்னை அருகில் உள்ள மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன.

 

இந்த இரு நாட்டுத் தலைவர்கள் சந்திப்பு தொடர்பாகத் தமிழக அரசு அதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சகம் ஆலோசனை நடத்தி வருகிறது. இந்த ஆலோசனையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆராயப்பட்டதாகக் கூறப்படுகிறது. அத்துடன்  மாமல்லபுரத்தின் உலகப் புகழ் பெற்ற சிற்பங்களையும் வரலாற்றுச் சின்னங்களையும் இரு நாட்டுத் தலைவர்களும் பார்வை இட உள்ளதாகவும் கூறப்படுகிறது.