தமிழகத்தில் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் காலூன்ற முடியாத அல்லது அவர்களின் மொழியிலேயே சொல்வதானால் தமிழகத்தில் மலர முடியாத பாரதீய ஜனதாவின் தலைவராக கடந்த 2014ம் ஆண்டு நியமனம் செய்யப்பட்டார் தமிழிசை சவுந்தரராஜன்.
அதுவரை அக்கட்சிக்கு எத்தனையோ தமிழக தலைவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஆனால், தமிழிசை அவர்களில் தனி ரகம். பாரம்பரிய காங்கிரஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர் அவர். அவரின் தந்தை குமரி அனந்தன் தமிழக காங்கிரஸ் தலைவராக பதவி வகித்தவர். அவரின் சித்தப்பா வசந்தகுமார் தற்போது கன்னியாகுமரி தொகுதியின் காங்கிரஸ் மக்களவை உறுப்பினர்.
மத்தியில் பாரதீய ஜனதா ஆட்சியமைத்த ஆண்டில் தமிழக பாரதீய ஜனதாவின் தலைவராக நியமிக்கப்பட்டாலும், பாரதீய ஜனதா மத்தியில் ஆளுங்கட்சி என்ற அந்தஸ்து இருந்தாலும், தேவையான ஊடக வெளிச்சங்கள் கிடைத்தாலும், தமிழிசையின் உழைப்பும் பணியும் அவற்றையெல்லாம் கடந்தது.
தமிழகத்தில் இவரளவிற்கு சமூகவலைதளங்களில் கேலிக்கும் கிண்டலுக்கும் சமீப ஆண்டுகளில் ஆளானவர்கள் யாருமில்லை எனலாம். தனிப்பட்ட முறையில் தோற்றத்தின் அடிப்படையிலும்கூட நகைப்பிற்கு ஆளாக்கப்பட்டார். இவரை கிண்டலடித்து இரவெல்லாம் வந்த இணைய அழைப்புகளுக்கு பதில் சொல்லி மாய்ந்தார்.
தொண்டை கிழிய நிருபர்களுக்கு பேட்டிகளை அள்ளித் தந்தார். இவரது கட்சியின் பல தலைவர்கள் தெருவில் இறங்குவதற்கே தயங்கி நிலையில், சளைக்காமல் களமாடினார். தேர்தல் வெற்றி-தோல்விகளைப் பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து செயலாற்றினார். பெரிய தகுதிகள் இல்லாத நிர்மலா சீதாராமன் போன்றோர் பிறப்பின் அடிப்படையில் உச்சத்தில் வைக்கப்பட்டாலும், அதைப்பற்றியெல்லாம் மனம் தளராமல் தொடர்ந்து கட்சிப் பணியாற்றினார்.
தான் பேசுவதில் லாஜிக் இருக்கிறதா? ஏதேனும் அர்த்தம் இருக்கிறதா? அல்லது தான் ஆதரிக்கும் கருத்துக்கள் மதிப்பு வாய்ந்தவையா? என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், தமிழகத்தில் பாரதீய ஜனதா என்றதொரு கட்சி இருக்கிறது என்பதைக் காட்டுவதற்காக தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தார். அதன்விளைவாக, பலரிடமும் வாங்கிக் கட்டிக்கொண்டும் இருந்தார்.
ஒரு கட்டத்தில், தன் மீது வந்து விழுந்த கேலி – கிண்டல்களை புன்னகையுடனும் நகைச்சுவையுடனும்கூட சகித்துக்கொள்ள தொடங்கினார். பத்திரிகையாளர் சந்திப்பில் வரும் ஏடாகூட கேள்விகளுக்குக்கூட கோபப்படாமல் பதிலளித்தார்.
தான் என்ற கர்வத்தையோ, திமிரான பேச்சையோ , மரியாதை குறைவான மறுமொழியையோ இவர் வெளிப்படுத்தியதாக எவருக்கும் நினைவிருக்காது என்றே நம்புவோமாக!
எது எப்படியோ, இவரின் தொடர்ந்த மோடி விசுவாசத்திற்கும் உழைப்பிற்கும் பரிசாக, இவரே எதிர்பார்க்காத வகையில் ஒரு கவுரவமான பதவியை வழங்கியிருக்கிறார்கள் மோடி & கோ.வினர்.
தமிழிசை போன்றவர்களுக்கு நியாயப்படி பார்த்தால் கிடைத்துள்ள பொருத்தமான பரிசுதான் இது..!