கவுகாத்தி:
அசாம் மாநிலத்தில், தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பான இறுதிப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டு உள்ளது. இதில்19 லட்சம் பேர் பெயர் சேர்க்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக மீண்டும் பரபரப்பு எழுந்துள்ளது.
இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில் இருந்து ஏராளமானோர் இந்தியாவுக்குள் வந்து, சட்டவிரோதமாக குடியேறி உள்ளனர். இவர்களை அடையாளம் காணும் வகையில் அசாம் மாநிலத்தில், உண்மையான இந்தியர்கள் யார், வெளிநாடுகளில் இருந்து குடியேறியவர்கள் யார் என்பது குறித்து கண்டறிய என்.ஆர்.சி. எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவு வரைவு பட்டியல் எடுக்கப்பட்டது.
இந்த கணக்கெடுப்பு பட்டியல் கடந்த 2018-ம் ஆண்டு ஜூலையில் வரைவு பட்டியல் வெளியிடப் பட்டது. இதில் 40 லட்சம் பேர் பதிவேட்டில் சேர்க்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதில் சேர்க்க 31 லட்சம் பேர் மனு அளித்துள்ள நிலையில், 40 லட்சம் பேர் விடுபட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசு சார்பில், வரைவு பட்டியல் மறுவரையறை செய்யப்பட்டு வருவதால், முழுமையாக முடிக்க கால அவகாசம் கோரப்பட்டது. அதன்படி, ஆகஸ்டு 31ந்தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது.
இந்த நிலையில், தற்போது அசாம் குடிமக்கள் பதிவேடு இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இதில், 19 லட்சம் பேர் பெயர் இடம் பெறவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. இது மீண்டும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது
இதுகுறித்து கூறிய என்ஆர்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் பிரதீக் ஹஜீலா , இறுதி பட்டி யலில் 3,11,21,004 பேர் இடம்பெற்றுள்ளனர். 19,06,657 பேர் பட்டியலில் இடம்பெறவில்லை. அவர்கள், பட்டியலில் உரிய ஆவணங்கள் வழங்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த பட்டியலில் திருப்தி இல்லாதவர்கள், வெளிநாட்டினவருக்கான தீர்ப்பாயத்தில் முறையிட லாம் என்றும் தெரிவித்து உள்ளார்.
என்ஆர்சி பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.