லண்டன்:
தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க 10 நாட்கள் பயணமாக வெளிநாடுகளுக்கு சென்றுள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முதல்கட்டமாக லண்டனில் தொழிலதிபர்களை சந்தித்து வருகிறார்.
பொதுவாக வேட்டி சட்டையுடன், நானும் ஒரு விவசாயி என்று கூறி வரும் முதல்வர், லண்டனில் கோட் சூட் அணிந்துகொண்டு மிடுக்குடன் காட்சித் தருகிறார். அங்கு பல்வேறு தொழிலதிபர்களை சந்தித்து பேசி வருகிறார்.
மூன்று நாடுகளுக்கு அரசு முறைப்பயணமாக புறப்பட்ட முதலமைச்சர் எடப்பாடி தமிழகத்திற்கு அதிக முதலீடுகளை ஈர்க்க முதற்கட்டாக துபாய் வழியாக லண்டன் நேற்று சென்றடைந்தார். அவருக்கு அங்குள்ள தமிழர்கள் வரவேற்பு அளித்தனர்.
அதைத்தொடர்தந்து, மருத்துவத்துறை மற்றும் பிற துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் புதிய தொழில்நுட்பங்களை கண்டறிந்து தமிழ்நாட்டில் செயல்படுத்திடும் வகையில், சர்வதேச மனிதவள மேம்பாட்டு நிறுவனத்தினருடன் (ISDC) சந்திப்பு நடைபெற்றது.
இதில், சுகாதாரத்துறை தொடர்பான 3 ஒப்பந்தங்களில் முதல்வர் தலைமையில் கையெழுத்திடப் பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் முதலமைச்சர் கையெழுத்திடும் போது தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் உடனிருந்தார்.
இங்கிலாந்து மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் பணித் தரத்தின் மேம்பாடுகளை தமிழகத்தில் செயல்படுத்த இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
பின்பு இங்கிலாந்தில் செயல்படுத்தப்படும் அவசர ஊர்தி சேவையை முதல்வர் பார்வையிடுகிறார். மலேரியா உள்ளிட்ட தொற்று நோய்களை ஏற்படுத்தும் கொசுக்களை கட்டுப்படுத்துவது, நோய்களை கையாளும் வழிமுறைகள் உள்ளிட்டவற்றை தமிழகத்தில் செயல்படுத்த அறிக்கை ஒன்றில் கையெழுத்திடும் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.