கவுகாத்தி:
வடகிழக்கு மாநிலங்களில் வாழும் நாகா இனத்தவருக்கு தனி நாடு, தனி பாஸ்போர்ட், மற்றும் கொடிக்கு மத்தியஅரசு ஒப்புதல் தெரிவித்து உள்ளதாக செய்திகள் பரவி வந்த நிலையில், அது வதந்தி என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதே வேளையில் கடந்த 14ந்தேதி அன்று நாகா இன மக்கள் கொண்டாடிய சுதந்திர தின விழாவின்போது, தங்களுக்கென உள்ள கொடியை ஏற்றி உள்ளதால், இந்த விவகாரம் மீண்டும் சூடுபிடித்து உள்ளது.
சமீபத்தில் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள அரசு அலுவலகங்களில் இந்திய தேசியக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில், நாகாலாந்து நாடு கோரி போராடும் நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சில் (என்.எஸ்.சி.என் ஐசக்-மூய்வா) மீண்டும் தனிக்கொடி, தனி நாடு என்ற விவகாரத்தை கையில் எடுத்து உள்ளது.
நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் கொண்டு வர முயற்சி செய்து வரும் பாஜக அரசு, இதுகுறித்து தனது தேர்தல் அறிக்கையிலும் கூறி இருந்தது. அதைத்தொடர்ந்தே ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு மட்டுமே தனிக் கொடி, அரசியல் அமைப்புச் சட்டம் இருந்ததை அகற்றி உள்ளது.
இந்த நிலையில், நாகா உள்பட சில மாநிலங்கள் தனிக்கொடி கேட்டுவரும் நிலையில், அதை ஏற்க மத்தியஅரசு மறுத்து வருகிறது.
நாகா பிரச்சினை தொடர்பாக கடந்த 2015ம் ஆண்டு இந்திய அரசுக்கும் நாகாலாந்து தேசிய சோஷலிஸ்ட் கவுன்சிலுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால் அதில் என்ன ஷரத்துக்கள் இடம்பெற்றுள்ளன என்பதை வெளிப்படையாக இரு தரப்பினரும் அறிவிக்கவில்லை.
இந்த நிலையில், நாகாலாந்துக்கு தனி கொடி, பாஸ்போர்ட்க்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள தாக செய்தி பரவியது. இதுகுறித்து கூறிய “நாகாலாந்து தேசிய சோஷலிஸ்ட் கவுன்சில் அமைப்பபினர், இந்தியா-நாகாலாந்து இடையே யான பிரச்னைகளுக்கு தீர்வு காண மத்திய அரசு ஒப்புக் கொண்டிருக்கிறது. இது தொடர்பாகா நாகா அமைப்பானது, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளது என்று கூறி உள்ளது
மேலும், இந்த விவகாரத்தில் முன்னேற்றம் இல்லை என்றும், முக்கிய விஷயங்களில் நிலைப்பாடு எடுப்பதில் இந்திய அரசு மெதுவாக செல்கிறது என்றும், “இது நாகா கொடி மற்றும் அரசியலமைப்பு போன்ற முக்கிய பிரச்சினைகளை பாதிக்கிறது” என்றும் தெரிவித்து உள்ளது.
மேலும் நாக விவகாரத்தில் தனிக்கொடி, தனி பாஸ்போர்ட் போன்ற முக்கிய சிக்கல்கள் தீர்க்கப்படா விட்டால், எந்தவொரு தீர்வும் கவுரவமானதாக இருக்காது, ஏனெனில் நாகாவின் பெருமையும் அடையாளமும் இங்கு ஆழமாக பதிந்துள்ளது என்று தெரிவித்து உள்ளது.
நாகா இனமக்கள் நாகாலாந்து, மணிப்பூர், அஸ்ஸாம் போன்ற வட மாநிலங்களில் வசிக்கின்றனர். நாகா இன மக்கள் வாழும் பகுதிகளை ஒருங்கிணைத்து அகன்ற தனி நாகாலாந்து நாடு அமைக்க வேண்டும் என்பதுதான் நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சிலின் கொள்கை என்பது குறிப்பிடத்தக்கது.