மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீதான அவதூறு வழக்கில் ஆகஸ்ட் 26ம் தேதி தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.
கடந்த 2006ம் ஆண்டு மதிமுகவை உடைக்க முயற்சி செய்கிறார் என மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு எதிராக, அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, வைகோ கடிதம் எழுதினார். இக்கடிதத்தின் அடிப்படையில், அப்போது புதிதாக பொறுப்பேற்ற திமுக அரசு, வைகோவுக்கு எதிராக, அவதூறு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணை சென்னையில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பு வாதம் மற்றும் வைகோ தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் சில நாட்களுக்கு முன்பு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு வரும் 26ம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே திமுக தொடர்ந்த தேச துரோக வழக்கில், வைகோ குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு, அத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ள நிலையில், தற்போது திமுக தொடர்ந்த மற்றொரு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.