சென்னை

மிகப் பெரிய வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான ஹுண்டாய் நிறுவனம் தனது  உற்பத்தியை  நிறுத்தி உள்ளது.

கடந்த சில மாதங்களாக வாகன விற்பனையில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது.   இதையொட்டி பல முகவர்கள் தங்கள் விற்பனை நிலையங்களை மூடி உள்ளனர்.  மீதமுள்ள முகவர்கள் தங்களிடம் உள்ள வாகனங்கள் விற்பனை ஆகும் வரை புதிய வாகனங்கள் கொள்முதலை நிறுத்தி உள்ளனர்.  இதனால் வாகன உற்பத்தி நிறுவனங்களின் உற்பத்தியில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  வட இந்தியாவில் உள்ள மாருதி, டாடா போன்ற மிகப்பெரிய வாகன உற்பத்தி தொழிற்சாலைகள் வேலை இன்றி மூடப்படும் நிலையில் உள்ளன.

சமீபத்தில் சென்னையில் சிறந்து விளங்கும் டிவிஎஸ் குழுமத்தின் மிகப் பெரிய  தொழிற்சாலையான லூகாஸ் டிவிஎஸ் வேலை இன்மையை அறிவித்தது தென் இந்திய மக்களுக்கு அதிர்ச்சியை அளித்தது.   பிரபல கொரிய வாகன நிறுவனமான ஹுண்டாய் தனது வாகன தொழிற்சாலையை சென்னை அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூரில் அமைத்துள்ளது.

ஹுண்டாய் நிறுவனம் இந்த மாத தொடக்கத்தில் இருந்தே உற்பத்தி குறைவை அறிவித்து வந்தது.   முதலில் இந்த தொழிற்சாலையின் மூன்று பகுதிகளில் வாரத்துக்கு இரு நாட்களுக்கு வேலை இன்மை  அறிவிக்கப்பட்டது.  அதன் பிறகு அது மேலும் பல பிரிவுகளுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.   தற்போது ஒரு சில பிரிவுகள் தவிர மற்ற பிரிவுகள் அனைத்திலும் வேலை இன்மை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஹுண்டாய் நிறுவன செய்தி தொடர்பாளர், “தற்போது வாகன விற்பனைச் சந்தை கடும் வீழ்ச்சியில் உள்ளது.  எனவே நாங்கள் புதிய பிரிவில் கவனம் செலுத்தி வருகிறோம்.  குறிப்பாக சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட எங்களது கோனா மின் வாகனத்துக்கு நல வரவேற்பு உள்ளது.  எனவே இந்த வரிசையில் மேலும் பல புதிய மாடல்களை இறக்குவது குறித்து  சோதனைகள் நடைபெற்று வருகிறது.

எனவே பழைய மாடல்களை உற்பத்தி செய்வதைச் சிறிது சிறிதாகக் குறைத்துக் கொண்டு வருகிறோம்.   எனவே அத்தியாவசியமான பிரிவுகளில் மட்டும் வேலை அளித்து வருகிறோம்.   அதுவும் அனைத்து நாட்களுக்கும் வேலை இருப்பதில்லை. ” என தெரிவித்துள்ளார்.