சென்னை:

மிழகத்தில் ரெயில் நிலையங்களில் ‘வை பை’ வசதி செய்து தரப்பட்டுள்ளது, மேலும் 275 ரெயில் நிலையங்களுக்கும் ‘வை பை’ வசதி விரிவாக்கம் செய்யப்படும் என்று தெற்கு ரெயில்வே கூடுதல் பொதுமேலாளர் பி.கே.மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

தெற்கு ரெயில்வே சார்பில்  பெரம்பூர் ரெயில்வே விளையாட்டு மைதானத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. அதில் கலந்துகொண்டு பேசிய  தெற்கு ரெயில்வே கூடுதல் பொது மேலாளர் பி.கே.மிஸ்ரா ரயில்வேயின் வளர்ச்சிப் பணிகளிள் குறித்து கூறினார்.

வருமானம் உயர்வு

அப்போது,  தெற்கு ரெயில்வே நடப்பு நிதி ஆண்டில் (ஜூலை மாதம் வரை) ஒட்டுமொத்த வருவாய் 7.37 சதவீதம் வளர்ச்சி அடைந்து இருக்கிறது. மேலும் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது, நடப்பு ஆண்டில் பயணிகள் ரெயில் மூலம் வருவாய் 8.62 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று கூறினார்.

சென்னையின் குடிநீர் தேவைக்காக ஜோலார்பேட்டையில் இருந்து வில்லிவாக்கத்துக்கு கடந்த ஜூலை மாதம் 12-ந் தேதி முதல் கடந்த 14-ந் தேதி வரை 55 முறை தண்ணீர் கொண்டு வரப்பட்டு இருக்கிறது.

அதுபோல  நிலக்கரி, சிமெண்ட், உணவு தானியங்கள் உரம், பெட்ரோலியம், எண்ணெய் வகைகள் உள்பட 10 ஆயிரத்து 862 மெட்ரிக் டன் அளவுக்கு பொருட்கள் சரக்கு ரெயில்கள் மூலம் ஏற்றி செல்லப்பட்டு இருக்கின்றன. இதன் காரணமாக தெற்க ரயில்வேக்கு வருமானம் அதிகரித்து உள்ளது.

புதிய ரயில்கள் அறிமுகம்

2018 19ம் ஆண்டில் மட்டும் 15 புதிய ரெயில்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. 13 ரெயில்களை நீட்டிப்பு செய்தும், 2,321 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டும் உள்ளன. வெவ்வேறு ரெயில்களில் 42 பெட்டிகள் நிரந்தரமாக இணைக்கப்பட்டு இருக்கின்றன. ரெயில்கள் சரியான நேரத்துக்கு வந்து சேரும் வகையில், வேகம் தொடர்பான கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்டு இருக்கின்றன. மேலும் சில ரெயில்களின் வேகத்தை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளன.

தெற்கு ரெயில்வேயில் 112 கி.மீ. தூரத்துக்கு இரட்டை ரெயில் பாதையாக மாற்றுவதற்கும், 127 கி.மீ. தூரத்துக்கு அகலப்பாதையாக மாற்றுவதற்கும், 18 கி.மீ. தூரத்துக்கு புதிய ரெயில் பாதை அமைப்பதற்கும் என மொத்தம் 257 கி.மீ. தூரத்துக்கு ரெயில் பாதைகள் அமைக்க நடப்பாண்டில் திட்டமிடப்பட்டு இருக்கின்றன.

இலவச வைபை வசதி

சென்னை எழும்பூர், திருச்சி, சேலம், மதுரை, கோட்டயம், பாலக்காடு ஆகிய 6 ரெயில் நிலையங்களின் மறு வளர்ச்சிக்காக ரூ.121 கோடியே 43 லட்சம் செலவில் பணிகள் நடைபெறுகிறது.

தெற்கு ரெயில்வேயில் பயணிகளின் வசதிக்காக 282 ரெயில் நிலையங்களில் ‘வை பை’ வசதி செய்து தரப்பட்டு இருக்கிறது. மேலும், 275 ரெயில் நிலையங்களுக்கும் ‘வை பை’ வசதி விரிவாக்கம் செய்யப்படும்.

நடப்பு நிதியாண்டில் மட்டும் பல்லவன், வைகை, சென்னை திருவனந்தபுரம், திருவனந்தபுரம் விரவல் ஆகிய 4 எக்ஸ்பிரஸ் ரெயில்களில் நவீன தொழில்நுட்பத்தில் தயாரான பெட்டிகள் (எல்.எச்.பி.) இணைக்கப்பட்டு இருக்கின்றன. மேலும் 8 ரெயில்களில் இந்த நவீன பெட்டிகள் விரைவில் இணைக்கப்பட உள்ளன.

இவ்வாறு அவர் பேசினார்.