டில்லி
கடந்த வருடம் காதி ஆணையத்தின் விற்பனை ரூ. 75000 கோடியை எட்டி உள்ளது.
காதி கிராம தொழில்கள் ஆணையம் என்பது கிராம மக்கள் முன்னேற்றத்துக்காக ஏற்படுத்தப்பட்ட ஆணையம் ஆகும். இந்த ஆணையம் பல கைவினைப் பொருட்கள், துணி ஆகியவற்றுடன் தேன், அப்பளம், அழகு சாதனங்கள் போன்றவற்றையும் விற்பனை செய்து வருகிறது. இவை அனைத்தும் கிராம மக்களால் தயாரிக்கப்படுபவை ஆகும்.
நாடெங்கும் விற்பனைக் குறைவு என்னும் பேச்சு எல்லா துறைகளிலும் பேசப்பட்டு வருகிறது. பல தொழில்கள் விற்பனைக் குறைவால் மூடப்பட்டு பலர் வேலை இழந்து வருகின்றனர். இது மிகப் பெரிய வாகன உற்பத்தி தொழிலில் இருந்து பல சிறு மற்றும் குறும் தொழில் வரை பரவி உள்ளன. இதில் உணவுப் பொருட்கள், அழகு சாதனங்கள் ஆகியவை தயாரிக்கும் நிறுவனங்களும் அடங்கும்.
ஆனால் காதி ஆணையத்தின் விற்பனை கடந்த 2018-19 ஆம் ஆண்டு ரூ.74315 கோடியாக ஆகி உள்ளது இது சென்ற ஆண்டை விட 25% அதிகமாகும். இதில் அப்பளம், தேன், மற்றும் அழகு சாதனப் பொருட்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. இந்த விற்பனை வளர்ச்சி கடந்த 4 ஆண்டுகளாகவே இருந்து வருகிறது. சென்ற 2017-18 ஆம் ஆண்டு இந்த நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி13% ஆக இருந்தது.
அழகு சாதனங்களின் அதிக விற்பனையாளர்கள் எனக் கூறப்படும் இந்துஸ்தான யூனிலிவர் நிறுவனத்தைப் போல் காதி இருமடங்கு விற்பனை செய்துள்ளது. அத்துடன் நிறுவனங்களின் வருட வருமான பட்டியலில் காதி 25 நிறுவனங்களுக்குள் ஒரு இடத்தை பிடித்துள்ளது.
விற்பனை அதிகரித்து வரும் அதே வேளையில் ஆணையத்தின் உற்பத்தியும் அதிகரித்து வருகிறது. முதலில் உற்பத்தி தேவையான அளவு இல்லாமல் பற்றாக்குறை ஏற்பட்டிருந்தது. தற்போது அந்த நிலை மாறி உள்ளது. அத்துடன் இதனால் கிராமப்புற வேலைவாய்ப்பும் அதிகரித்துள்ளது. முதலில் இந்த ஆணையம் 1.5 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு அளித்து வந்தது. தற்போது அது 5 கோடியாக அதிகரித்துள்ளது.