இந்திய வரலாற்றில், ஒரு மாநிலத்தின் நீண்டகால முதல்வராக இருந்த பவன்குமார் சாம்லிங், பாரதீய ஜனதாவின் அரசியல் அட்டூழியத்தால் தற்போது தனிமரமாக விடப்பட்டுள்ளார்.
கடந்த 25 ஆண்டுகளாக தொடர்ந்து சிக்கிம் மாநிலத்தின் ஆட்சிப் பொறுப்பில் இருந்த சிக்கிம் ஜனநாயக முன்னணி(SDF) கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் 13 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது. அம்மாநில சட்டசபை உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 32.
ஆனால், தனக்கு செல்வாக்கு இல்லாத பல மாநிலங்களிலும் ஜனநாயக அவலங்களை நிகழ்த்தி, ஆட்சியைப் பிடிப்பது அல்லது ஆட்சியைக் கவிழ்ப்பது போன்ற சீரழிவான வேலைகளில் ஈடுபடும் பாரதீய ஜனதா சிக்கிமிலும் தனது வேலையை அரங்கேற்றிவிட்டது.
அதன்படி, சிக்கிம் ஜனநாயக முன்னணியைச் சேர்ந்த 10 சட்டமன்ற உறுப்பினர்களை அப்படியே அள்ளி தனது கட்சியில் இணைத்துக்கொண்டது. இதனால், பவன்குமார் சாம்லிங்குடன் சேர்த்து மொத்தம் 3 சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே எஞ்சியிருந்தனர்.
தற்போது, அவர்களிலும் இருவர் தற்போது மாநிலத்தை ஆளும் சிக்கிம் கிராந்திகரி மோர்ச்சா கட்சியில் இணைந்துவிட்டனர். இதனால் கடந்த 25 ஆண்டுகளாக தொடர்ச்சியாக மாநிலத்தை ஆண்டு, தற்போது வரையான இந்திய சாதனையை வைத்திருக்கும் பவன்குமார் சாம்லிங் தனிமரமாக விடப்பட்டுள்ளார்.