வயநாடு
கேரள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தனது தொகுதியான வயநாடு பகுதியில் உள்ள நிலச்சரிவுகளை ராகுல் காந்தி பார்வை இட்டார்.

கேரள மாநிலத்தில் தற்போது கன மழை பெய்து வருவதால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மாநிலம் எங்கும் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிப்பு அடைந்துள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு தொகுதியின் மக்களவை உறுப்பினர் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆவார். இந்த பகுதியில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டு மக்கள் தவித்து வருகின்றனர்.
இதையொட்டி நேற்று இந்த பகுதிக்கு ராகுல் காந்தி வருகை தந்தார். அவர் சனிக்கிழமை அன்று இது குறித்து தனது டிவிட்டரில், “வரும் சில தினங்களுக்கு நான் வெள்ளத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள எனது தொகுதியான வயநாட்டுக்குச் செல்கிறேன். நான் இந்த பகுதியில் உள்ள மீட்பு முகாம்களுக்கு செல்ல உள்ளேன். மேலும் மீட்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட மற்றும் மாநில அதிகாரிகளுடன் விசாரிக்க உள்ளேன்” என பதிந்திருந்தார்.
அதன்படி நேற்று கேரளாவில் வயநாடு பகுதியில் கடும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கவலப்பாரா பகுதியை ராகுல் காந்தி பார்வை இட்டார். மீட்புப் பணிகளை பார்வை இட்ட அவர் அவற்றை துரிதமாகச் செயல்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

ராகுல் காந்தி தனது டிவிட்டரில், “நான் அதிக அளவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள கவலப்பாரா பகுதிக்கு சென்றுள்ளேன். இன்னும் பலர் நிலச்சரிவில் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. ஆனால் உடனடி உதவி அங்கு அதிகம் தேவையாக உள்ளது. வயநாடு மக்களின் இழப்பைப் பார்க்கையில் நான் மனம் உடைந்து போனேன். எனது சக்திக்கு முயன்ற அளவு அவர்கள் இந்த துயரிலிருந்து மீண்டு வர உதவ உள்ளேன்” எனப் பதிந்துள்ளார்.
[youtube-feed feed=1]