பெய்ஜிங்: இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் தங்களுக்கிடையிலான பிரச்சினைகளுக்கு சுமூகமான முறையில் பேச்சுவார்த்தை மூலமாக தீர்வுகாண வேண்டுமென சீனா கேட்டுக் கொண்டுள்ளது.
காஷ்மீர் விஷயத்தில் இந்திய அரசின் முடிவை எதிர்த்து உலகளவில் பாகிஸ்தான் ஆதரவு திரட்டி வருகிறது. அதன் ஒருபகுதியாக, பாகிஸ்தானின் நெருங்கிய நட்பு நாடான சீனாவின் ஆதரவைக் கோரி, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷ் சீனா சென்றார்.
இந்த நிலையில்தான் இத்தகைய கருத்தை தெரிவித்துள்ளது சீனா. காஷ்மீர் விஷயத்தில் சமீபத்தில் இந்தியா மேற்கொண்ட நடவடிக்கையை, தன்னிச்சையானது மற்றும் ஒருதலைபட்சமானது என்று கண்டனம் தெரிவித்த பாகிஸ்தான், இப்பிரச்சினையை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு கொண்டுசெல்ல உள்ளதாகவும் தெரிவித்தது.
லடாக் தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்து சீனா, இந்தியாவின் நடவடிக்கையை நேரடியாக குறிப்பிடாமல், பதற்றத்தை உருவாக்கும் வகையில் இரண்டு நாடுகளுமே தன்னிச்சையான செயல்பாடுகளை தவிர்த்து கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.