மும்பை

மீபத்தில் பெய்த கனமழையால் மும்பை நகர் நீராதார ஏரிகளில் ஒரு வருடத்துக்குத் தேவையான நீர் சேர்ந்துள்ளது.

மும்பை நகரில் சென்ற வருடம் மழை குறைவாக பெய்தது.  இதனால் தண்ணீர் பஞ்சம் தலை தூக்கியது.   எனவே கடந்த வருடம் நவம்பர் மாதம் நகரின் குடிநீர் விநியோகம் 10% குறைக்கப்பட்டது.   மும்பை மற்றும் அந்நகரைச் சுற்றி உள்ள 7 ஏரிகள் நகருக்குத் தேவையான குடிநீரை அளித்து வருகிறது.  இந்த ஏரிகளில் உள்ள நீர்க்குறைவினால் குடிநீர் விநியோகம் குறைக்கப்பட்டது.

இந்த வருடம் மும்பை நகரில் பருவமழை தாமதமாக தொடங்கினாலும், கனமழையாக பெய்து வருகிறது.  மழையினால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.   ரெயில் மற்றும் சாலைப் போக்குவரத்து பாதிப்பு அடைந்துள்ளது.   கனமழை காரணமாக 50 பேர் வரை மரணம் அடைந்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

அதே நேரத்தில் மும்பை மக்களுக்கு மகிழ்வூட்டும் வகையில் நகரின் 7 ஏரிகளிலும் 90% வரை நீர் நிரம்பி உள்ளன.  நகரில் உள்ள ஏரிகளின் கொள்ளளவில் 90% அதாவது 13,01, 984 மில்லியன் லிட்டர் நீர் நிரம்பி உள்ளது.   முழுக் கொள்ளளவை விட இது 10% குறைவு எனக் கூறப்பட்டாலும் இந்த நீர் மும்பை நகருக்கு இன்னும் 12 மாதங்களுக்கு போதுமானதாகும்.

அத்துடன் மழைக்காலம் இன்னும் முடிவடையாததால் மீதமுள்ள 10% நீரும்  கிடைக்க வாய்ப்புள்ளதாக மும்பை மகாநகராட்சிஅதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.