ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டு உள்ள நிலையில், இன்று காலை 9.30 மணி அளவில் பிரதமர் இல்லத்தில் அமைச்சரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், காஷ்மீர் பிரச்சினை குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
காஷ்மீர் மாநிலத்தில் மீண்டும் பயங்கரவாதிகளின் அட்டூழியம் அதிகரித்துள்ள நிலையில்,அமர்நாத் யாத்திரை மேற்கொள்ளும் யாத்ரீகர்களுக்கு குறி வைத்துள்ளதாக உளவுப்பிரிவினருக்கு தகவல் கிடைக்கப்பெற்றது. இதையடுத்து, அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப்பட்டு பக்தர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். இங்கு இதுவரை இல்லாத வகையில் 90 ஆயிரம் படை வீரர்கள் குவிக்கப்பட்டனர்.
எங்கு பார்த்தாலும் ராணுவ வீரர்கள் ரோந்து பணியிலும், கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருவது, மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. பெரும்பாலான கல்லூரிகள், தங்கள் விடுதிகளில் உள்ள மாணவ, மாணவிகளை வெளியேற்றி சொந்த ஊர் திரும்புமாறு கூறி விட்டன. இஸ்லாமிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், தேர்வுகளை ஒத்தி வைத்துள்ளது. ஸ்ரீநகரில் உள்ள தலைமைச் செயலகம், போலீஸ் தலைமை அலுவலகம், விமான நிலையம் மற்றும் மத்திய அரசு அலுவலகங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் காஷ்மீரில் நிலவி வருகிற அசாதாரண குழு குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் உயர் மட்டக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், உள்துறை செயலாளர் ராஜீவ் கவுபா, தேசிய பாதுகாப்பு செயலாளர் அஜித் தோவல், உளவுத்துறை (ஐ.பி.) தலைவர் அரவிந்த் குமார், வெளிநாட்டு உளவு பிரிவு (ரா) தலைவர் சமந்த் குமார் கோயல் மற்றும் உள்துறை அமைச்சக உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அதைத்தொடர்ந்து, காஷ்மீரில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இதற்கிடையில், காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாடு கட்சி தலைவருமான பரூக் அப்துல்லா வீட்டில் அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தது. இதில் உமர் அப்துல்லா, மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் காஷ்மீர் விவகாரம் இன்று பாராளுமன்றத்தில் எதிரொலிக்கும் என்பதால், முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி, டெல்லியில் காலை 9.30 மணிக்கு மத்திய மந்திரிசபையை கூட்டி ஆலோசனை நடத்தி வருகிறார்.