புதுடெல்லி: வன்புணர்வுக்கு உள்ளானதாக கூறப்பட்டு தற்போது விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடும் உன்னாவா பெண்ணின் தாயார் தனக்கு எழுதிய கடிதம் ஏன் சரியான நேரத்தில் வந்துசேரவில்லை? என்று உச்சநீதிமன்ற பதிவகத்திடம் கேட்டுள்ளார் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்.
இதுதொடர்பாக கூறப்படுவதாவது; பாரதீய ஜனதா சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் செங்காரால் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டதாக கூறப்படும் 19 வயது பெண்ணின் தாயார் கடந்த ஜுலை மாதம் 12ம் தேதி தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு கடிதம் எழுதினார்.
ஆனால், அந்தக் கடிதம் சரியான நேரத்தில் நீதிபதியிடம் சென்று சேரவில்லை. பாதிக்கப்பட்ட பெண், அவரின் உறவுப் பெண்கள் மற்றும் வழக்கறிஞர் ஆகியோர் விபத்தில் சிக்கியப் பிறகே அக்கடிதம் நீதிபதியிடம் போய்ச் சேர்ந்துள்ளது என்று கூறப்படுகிறது.
“எனக்கு பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் கடிதம் எழுதிய விஷயத்தை செய்தித்தாளில் படித்தே தெரிந்து கொண்டேன். செவ்வாய்க்கிழமைதான் எனக்கு அதுகுறித்த தகவல் கிடைத்தது. அதேசமயம் அந்தக் கடிதத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. அது எனக்கு முன்னதாக இனிமேல்தான் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது. ஒரு மோசமான சூழலில் நாம் ஆக்கப்பூர்வமான செயல்பட முயல வேண்டும்” என்றுள்ளார் ரஞ்சன் கோகோய்.