டில்லி:

பிஎஸ் உள்பட 11 எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், சபாநாயகர் செய்ய வேண்டிய தகுதி நீக்க நடவடிக்கையை நீதிமன்றம் செய்ய இயலுமா என்று உச்சநீதி மன்ற நீதிபதி கேள்வி எழுப்பி உள்ளார்.

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி திமுக கொறடா சக்கரபாணி‌, தமிழ்ச்செல்வன்  தொடர்ந்த வழக்கு பல்வேறு தடங்களுக்கு பிறகு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த வழக்கு நீண்ட நாட்களாக நிலுவையில் இழுத்தடிக்கப்பட்ட இந்த வழக்கை விரைந்து விசாரிக்கக் கோரி,  வழக்கறிஞர் கபில்சிபல் தலைமை நீதிபதியிடம்  நேரில் வலியுறுத்தி இருந்தார். அதைத்தொடர்ந்து, ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மீதான வழக்கை  புதிய அமர்வு இன்று விசாரிக்கும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், வழக்கு  இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கை விசாரித்த உச்சநீதி மன்ற தீதிபதி,  ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் விவகாரத்தை விரிவாக விசாரிக்க வேண்டியுள்ளது என்று கூறினார்.

அப்போது வாதாடிய திமுக தரப்பு வழக்கறிஞர், அரசியல் சாசனம் 226 பிரிவை பயன்படுத்தி எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது. எனவே அந்த பிரிவின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இதையடத்து கருத்து தெரிவித்த  நீதிபதி பாப்டே,  சபாநாயகர் செய்ய வேண்டிய தகுதி நீக்க நடவடிக்கையை நீதிமன்றம் செய்ய இயலுமா? என்றும் கேள்வி விடுத்துள்ளார்.

வழக்கு விசாரணை நிலுவையில் இருப்பது, நீதிமன்றத்தை சந்தேகப்படும் நோக்கில் பார்க்கப்படுகிறது என்று நீதிபதி தெரிவித்த நிலையில், வழக்கை ஒத்திவைக்கக் கோரிய  திமுகவின் கோரிக்கையை ஏற்று விசாரணையை ஆகஸ்ட் 20-ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.