சென்னை:
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலிதாவின் மறைவுக்குப் பிறகு, அதிரடியாக அரசியலுக்குள் வந்த, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா தற்போது அதிரடியாக அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்புதான், வாட்ஸ்அப் மெசேஜ் மூலம் கட்சி நிர்வாகியை நீக்கி அதிரடி நடவடிக்கை எடுத்த தீபா, தற்போது அரசியலுக்கு முழுக்குப் போடுவதாக அறிவித்து உள்ளார்.
ஜெ.மறைவுக்கு பிறகு, அவரது சொத்துக்கு வாரிசாக அறிவிக்கக்கோரி இன்றுவரை கொடிபிடித்து வருபவர், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா. ஜெயலலிதா உயிரோடு இருக்கும்வரை, அவர் அருகில் நெருங்க முடியாமல் இருந்து வந்தவர், அவரது மறைவுக்கு பிறகு வெளியே வந்தார். ஆனால், சசிகலாவின் ஆதிக்கம் காரணமாக, தீபா தொடர்ந்து புறக்கணிக்கப்பட்ட நிலையில், ஜெயலலிதா தீபா பேரவை என்ற புதிய அமைப்பை தொடங்கி அரசியலுக்குள் களம்புகுந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
அதைத்தொடர்ந்து, கட்சிக்கொடி, அது இதுவென்று பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வந்த நிலையில், கட்சி யில் இருந்து தனது கணவர் மாதவன், மற்றும் டிரைவர் ராஜா போன்றோரை அதிரடியாக நீக்குவதாக அறிவித்தும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தார். இறுதியாக கடந்த வாரம் தீபா பேரவையின் திருச்சி மாவட்ட செயலாளர் கோபி அவர்களை வாட்ஸ் அப் மெசேஜ் மூலம் கட்சியில் இருந்து தீபா நீக்கி பரபரப்பை ஏற்படுத்தி வந்தார்.
இந்த நிலையில், தான் கட்சியில் இருந்து விலகுவதாகவும், தன்னை யாரும் என்னை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தீபா அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
மேலும், எனக்கென்று குடும்பம் உள்ளது. அதுதான் எனக்கு முக்கியம் குழந்தை பெற்றுக் கொண்டு கணவரோடு வாழத்தான் எனக்கு ஆசை என்றும், தீபா பேரவையை அதிமுகவுடன் இணைத்துவிட்டதாகவும், யாரும் தம்மை தொந்தரவு செய்ய வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பேரவையை அதிமுக உடன் இணைத்து விட்டேன், விருப்பம் இருந்தால் அந்த கட்சியில் சேர்ந்து கொள்ளுங்கள் தீபா பேரவை பெயரைச் சொல்லி தொடர்ந்து என்னை துன்புறுத்தி வருவதை இதோடு நிறுத்த வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார்.