சென்னை: தமிழக அரசுப் பள்ளியின் 3 மாணவர்கள், எளிதாக இடமாற்றக்கூடிய பயோமெட்ரிக் முறையிலான வாக்களிக்கும் சாதனத்தைக் கண்டுபிடித்துள்ளனர். இதன்மூலம், தொலைதூரப் பகுதிகளில் வாழும் மக்கள் பயன்பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“கடந்த மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்கு சதவிகிதம் 67.11%. அந்த எண்ணிக்கையை 100% ஆக்க வேண்டுமென்பதே எங்களின் விருப்பம். தொலைதூரப் பகுதிகளில் வாழும் மக்கள் வாக்குப் பதிவு மையங்களுக்கு வருவது கடினமான காரியமாக உள்ளது. எனவே, அத்தகையோர் தங்களின் வாக்குகளை எளிதாகப் பதிவுசெய்ய இந்த புதிய சாதனம் உதவும்” என்று தெரிவிக்கிறார் 14 வயது நிரம்பிய பிரதீப் குமார் என்ற மாணவர். இவர் சென்னை கோடம்பாக்கத்திலுள்ள பதிப்பகச் செம்மல் கே கணபதி அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கிறார்.
அந்த மாணவர் தன்னுடைய பள்ளி சீனியர்கள் எம் வி ஜெபின் மற்றும் பி ஜெயச்சந்தர் ஆகியோருடன் இணைந்து இந்த சாதனத்தைக் கண்டுபிடித்துள்ளார். தேசிய சிக்கல்களுக்கு தீர்வளிக்கும் வகையிலான அறிவியல் கண்டுபிடிப்புகள் குறித்து யோசிக்கையில், தேர்தல் தொடர்பான பிரச்சினையை தீர்க்கும் வகையில் இந்த சாதனத்தைக் கண்டுபிடித்தோம்” என்கிறார் மற்றொரு மாணவர் ஜெபின்.
இந்த சாதனத்தைப் பயன்படுத்துவதன் மூலம், ஒரு வாக்காளர் தனது அடையாள அட்டையை கட்டாயம் வைத்திருக்க வேண்டுமென்பதில்லை. இணையத்துடன் இணைப்புப்பெற்ற இந்த சாதனம், சம்பந்தப்பட்டவரின் ஆதார் விபரங்களை எடுத்துவிடும்.
விரல் ரேகை மற்றும் கருவிழி பதிவு போதுமானது. இந்த சாதனத்தில் யாரும் இருமுறை வாக்களித்து மோசடியும் செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சாதனத்தை எந்த இடத்திலும் பயன்படுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த சாதனத்தை 6 மாதங்களில் முயன்று வடிவமைத்துள்ளனர் அந்த மாணவர்கள்.