சென்னை:

சென்னையில், ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் போக்குவரத்த நெரிசலை குறைக்க மூன்று புதிய மேம்பாலங்கள் அமைக்கப்படும் என்றும், அதற்கான நிதி ஒதுக்கீடு செய்தும், தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த பணிகள் மெட்ரோ ரயில் பணிகள் முடிவடைந்ததும் தொடங்கும் என்று கூறியது.

தற்போது  மெட்ரோ ரயில் பணிகள் முடிவடைந்து, அண்ணசாலை மீண்டும் 4வழிச்சாலையாக இன்னும் ஓரிரு நாளில் திறக்கப்பட உள்ளது. இந்த நிலையில், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட மேம்பாலங்களின் பணிகளை தமிழகஅரசு உடனே தொடங்குமா என்று கேள்வி எழுந்துள்ளது.

சென்னை, தேனாம்பேட்டை, அண்ணா சாலையில், எல்டாம்ஸ் சாலை – தியாகராய நகர் சாலை சந்திப்புகளில், போக்குவரத்து நெரிசல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதை குறைக்கும் வகையில்,  தேனாம்பேட்டை சந்திப்பு மற்றும்  நந்தனம் சந்திப்பிலும் மேம்பாலங்கள் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது.  இதற்காக   122.8 கோடி மதிப்பீடு செய்யப்பட்டு உள்ள நிலையில்,   டெண்டர் எடுப்பவர்கள் இல்லாததால் பணி முடங்கி உள்ளது.

அதுபோல,   வெங்கடநாராயண சாலை மற்றும் பசும்பொன்  முத்துராமலிங்க தேவர் சிலை  ஆகியவற்றை இணைக்கும் மற்றொரு  பாலம்  பணியும் கிடப்பில் உள்ளன.  இதன காரணமாக,  பிராட்வே பகுதியில் இருந்து கிண்டிக்கு, அண்ணா சாலை வழியாக செல்வோர், தேனாம்பேட்டை, நந்தனம் சிக்னல் ஆகிய இடங்களில், நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது.

இத்துடன், பொதுமக்களின் வசதியை கருத்தில்கொண்டு, தி.நகர் பேருந்து நிலையத்தில் இருந்து, மாம்பலம் ரயில் நிலையம் வரை, ‘எஸ்கலேட்டர்’ வசதியுடன் கூடிய, உயர்மட்ட நடைமேம்பாலம் அமைக்கப்பட இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.  இந்த பணிகளுக்காக, 28.50 கோடி ரூபாய்க்கு டெண்டர் கோரப்பட்டு உள்ளது. மேலும், புழல் – ஆமுல்லைவாயல் கால்வாயை இணைக்கும் வகையில், 10.71 கோடி ரூபாய் செலவில், புதிய மேம்பாலம் அமைக்க இருப்பதாகவும் தமிழக அரசு கூறியிருந்தது.

இதுகுறித்து கூறிய தமிழக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, 1.2 கிலோ மீட்டர் நீளமுள்ள தேனாம்பேட்டை மேம்பாலப் பணிகளுக்கு டெண்டர் கோரியிருந்ததாகவும், அதை எடுக்க யாரும் முன்வராததால், மீண்டும் டெண்டர் கோரப்படும் என்று தெரிவித்து உள்ளார்.

தற்போது, சென்னை முழுவதும்  மழைநீர் வடிகால் உள்ளிட்ட பணிகள் நடந்து வரும் நிலையில், விரைவில் திட்டமிட்டபடி மேம்பாலங்கள் கட்டும் பணியை உடனே தொடங்க வேண்டும் என்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.