சென்னை

த்திய அரசின் தொழிலாளர் சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து ஆகஸ்ட் 2 ஆம் தேதி நடைபெறும் போராட்டத்தில் தமிழகம் பங்கேற்க உள்ளது.

மக்களவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்த போது மத்திய அரசு தொழிலாளர் சட்டத்தைத் திருத்த உள்ளதாக அறிவித்தது. அத்துடன் இந்த சட்டத் திருத்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆயினும் ஆளும் கட்சியான பாஜகவுக்கு மக்களவையில் பெரும்பான்மை இருந்ததால் மசோதா நிறைவேறியது.

இந்த சட்ட மசோதாவை ஒட்டி நாடெங்கும் உள்ள தொழிற்சங்கங்கள் வரும் ஆகஸ்ட் மாதம் 2 ஆம் தேதி போராட்டம் நடத்த உள்ளன. கடந்த ஞாயிறு அன்று தமிழகத்தில் உள்ள காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், திமுக உள்ளிட்ட கட்சிகளின் தொழிற்சங்க ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் சென்னையில் நடந்தது. இந்த கூட்டத்தில் ஆகஸ்ட் 2ஆம் தேதி நடைபெற உள்ள போராட்டத்தில் தமிழகம் பங்கேற்கும் எனத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இயற்றப்பட்ட தீர்மானத்தில், “மத்திய அரசு தனியார் நிறுவனங்கள் நன்மை அடையும் வகையில் தொழிலாளர் சட்டங்களைத் திருத்தி உள்ளது. சுமார் 44 தொழிலாளர் சட்டங்கள் நான்கு பிரிவுகளில் இணைக்கப்பட்டுள்ளன. இதை மாநிலங்களவையில் நிறைவேற்ற அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் இந்தக் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 7 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழிற்சங்கங்கள்,”இந்த சட்டத் திருத்தம் மூலம் தொழிலாளர் ஊதிய விதி, போனஸ் விதி உள்ளிட்ட பல விதிகள் மாற்றப்படுவதால் தொழிலாளர்களின் ஊதியம் குறையும். மத்திய ஊதிய ஆணையம் தொழிலாளர்களின் அடிப்படை ஊதியம் ரூ.18000 ஆக இருக்க வேண்டும் என அறிவித்துள்ள நிலையில் மத்திய அரசு சமீபத்தில் அடிப்படை ஊதியமாக ரூ.4628 ஐ பரிந்துரை செய்துள்ளது” எனத் தெரிவித்துள்ளன.

மேலும் தொழிற்சங்கங்கள் தங்கள் எதிர்ப்பையும் மீறி மோட்டார் வாகன சட்டம் திருத்தப்பட்டதைச் சுட்டிக்காட்டி தொழிலாளர்களின் அனைத்து அதிகாரங்க்ளையிம் மத்திய அரசு பறித்து வருவதாகவும் இது ஜனநாயக விரோத்மானது எனவும் தெரிவித்துள்ளன.