சென்னை:
சென்னை பாரிமுனை பகுதியில், ரிசர்வ் வங்கி அருகே உள்ள ரயில்வே மேம்பாலத்திலிருந்து மனிதக்கழிவுகள் கீழே உள்ள வாகனங்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மீது கொட்டுவதை தடுக்க உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசின் பதிலை ஏற்று, 6 மாதத்திற்குள் பணிகளை முடிக்க சென்னை உயர்நீதி மன்றம் ரயில்வேக்கு உத்தரவிட்டு உள்ளது.
சென்னை தலைமைச்செயலகத்தையடுத்து, ரிசவர் வங்கி அருகே பாரிமுனை பகுதியில் ரயில்வே சுரங்க பாலம் உள்ளது. அந்த வழியாக எக்ஸ்பிரஸ் ரயில்கள் செல்லும்போது, அதிலிருந்து வெளியாகும் மனித கழிவுகள், பாலத்திற்கு கீழே செல்லும் இருச்சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் வாகனங்கள் மீது விழுந்து சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்தி வருகின்றன.
இந்த சுரங்கப்பாதையை தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயணிக்கிறார்கள். குறிப்பாக, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், வழக்கறிஞர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் உட்பட பல முக்கியப் பிரமுகர்களும் தினமும் கடந்துசெல்லும் இடம். அதன் காரணமாக, ரயில்வே பாலத்தில் இருந்து மனித கழிவுகள் கீழே விழாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்கறிஞர் என்.எஸ்.சிவக்குமார் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை நீதிபதி எஸ்.மணிகுமார் மற்றும் நீதிபதி சுப்ரமோனியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் விசாரித்து வந்தத. வழக்கின் கடந்த விசாரணையின்போது, ரயில்வே சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், “அந்த இடத்தில் புதிய பாலம் கட்டுவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். இதற்காக டெண்டர் கோரப்பட்டு, ஒப்பந்ததாரர் இறுதி செய்யப்பட்டுவிட்டது. ஆனால், அங்கு புதிய பாலம் கட்டுவதற்கு, அந்தப் பாதையை மூட வேண்டும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் மற்றும் போக்குவரத்துக் காவல் துறை ஆகி யோரிடம் அனுமதி கோரியிருக்கிறோம். தங்களுக்கு இதுவரை பதிலும் தரப்படவில்லை என்று கூறியது.
இதையடுத்து, சென்னை மாவட்ட ஆட்சியரும் சென்னை காவல்துறை (போக்குவரத்து) கூடுதல் ஆணையரும் ஒருவார காலத்துக்குள் பதிலளிக்க வேண்டுமென்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையடுத்து , காவல்துறை மற்றும் சென்னை ஆட்சியர் சார்பில் பதில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ரயில்வே நிர்வாகம் பாலம் அமைக்கும் வகையில், சுரங்கப் பாதையின் ஒவ்வொரு பகுதியாக மூட ஒப்புக் கொண்டுள்ளனர்.
அதன்படி, பாலத்தின் பழுதுபார்க்கும் பணி. சாலையின் ஒரு பக்கத்தில் பணிகள் மேற்கொள்ளப்படும், மறுபுறம் போக்குவரத்து நடைபெறும்., இதனால் சாலையை முழுமையாக மூடுவதைத் தவிர்க்கலாம். சுமார் ஆறு மாதங்களில் முழு வேலையும் முடிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றம் ரயில்வேக்கு உத்தரவிட்டு உள்ளது.