சியால்கோட்: பாகிஸ்தானில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்துக் கோயில் மீண்டும் பக்தர்களுக்காக திறக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை அந்நாட்டுப் பிரதமர் இம்ரான்கான் பிறப்பித்தார்.

இதுகுறித்து கூறப்படுவதாவது; பாகிஸ்தானின் பஞ்சாப் மாநில சியால்கோட் நகரத்தில் கடந்த 72 ஆண்டுகளாக பூட்டப்பட்டு இருந்தது 1000 ஆண்டுகள் பழமையான இந்துக் கோயில் ஒன்று.

கடந்த 1992ம் ஆண்டு பாபர் மசூதி இடிப்புக்கு எதிராக பாகிஸ்தானில் நடந்த கலவரத்தில் அந்தக் கோயில் சேதப்படுத்தப்பட்டது. அதிலிருந்து பக்தர்கள் யாரும் அந்தக் கோயிலுக்கு செல்வதில்லை.

ஷவாலா தேஜா சிங் கோயில் என்றழைக்கப்படும் இந்தக் கோயிலை கட்டியவர் சர்தார் தேஜா சிங். நாட்டுப் பிரிவினையின்போது இந்தக் கோயில் மூடப்பட்டது. இதனிடையே இந்தக் கோயிலை மீண்டும் திறந்து புனரமைப்பு செய்து பக்தர்களின் பயன்பாட்டிற்கு அனுமதிக்க முடிவுசெய்தார் அந்நாட்டுப் பிரதமர் இம்ரான்கான்.

அரசின் இந்த முடிவுக்கு அந்நாட்டின் இந்து மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர். இந்தக் கோயிலுக்கு எப்போது வேண்டுமானாலும் பக்தர்கள் பயமின்றி வந்து செல்லலாம் என்று தெரிவித்துள்ளார் துணை கமிஷனர் பிலால் ஹைதர். மேலும், இந்தக் கோயிலை புனர் நிர்மாணம் செய்யும் பணிகளும் விரைவில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.