இம்பால்
மணிப்பூர் மாநிலத்தில் பாஜகவுக்குத் தாவிய காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்யாத சபாநாயகருக்கு மணிப்பூர் உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த வருடம் மார்ச் மாதம் மணிப்பூர் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடந்தது மொத்தமுள்ள 60 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 28 தொகுதிகள், பாஜக 21 தொகுதிகள், நாகாலாந்து மக்கள் முன்னணி 4 தொகுதிகள், மற்றும் லோக் ஜனசக்தி.திருணாமுல் காங்கிரஸ், சுயேச்சை ஆகியோர் தலா ஒரு தொகுதியில் வெற்றி பெற்றனர். காங்கிரசால் சிறிய கட்சிகள் ஆதரவைப் பெற முடியாததால் ஆட்சி அமைக்க முடியவில்லை.
இந்த சிறிய கட்சிகளின் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைத்தது. பாஜகவின் பிரேன் சிங் மார்ச் மாதம் 15 ஆம் தேதி பதவி ஏற்றார். காங்கிரசில் இருந்து 6 சட்டப்பேரவை உறுப்பினர்கள் பாஜகவுக்குத் தாவினர். இதில் ஷ்யாம்குமார் என்பவர் அமைச்சரானார். கடந்த வார முற்பகுதியில் மேலும் இரு சட்டப்பேரவை உறுப்பினர்கள் காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளனர்.
இவ்வாறு இணைந்துள்ள காங்கிரஸ் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்களில் யாரும் பதவியை ராஜினாமா செய்யாமல் பாஜகவில் சேர்ந்துள்ளனர். இது கட்சித்தாவல் தடை சட்டத்தின் படி சட்ட விரோதமாகும். எனவே அவர்களைத் தகுதி நீக்கம் செய்யாத மணிப்பூர் சபாநாயகர் யுமன் கேம்சந்த் சிங் மீது காங்கிரஸ் கட்சி சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த மணிப்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி நோபின் சிங் தனது தீர்ப்பில், “சட்டப்பேரவை விதிகளின் படி சபாநாயகர் கட்சி மாறிய உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்திருக்க வேண்டும். அதே நேரத்தில் சபாநாயகருக்கு இந்த நீதிமன்றம் அவ்வாறு நடக்க உத்தரவிட முடியாது. அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் அமைச்சரானது சட்டவிரோதம் என இந்த நீதிமன்றம் சபாநாயகருக்கு அறிவிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.