சென்னை:

நிலவிற்கு மனிதன் செல்ல 4வருடங்களாக ஆராய்ச்சி நடைபெற்று வருவதாக முன்னாள் இஸ்ரோ திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.

இஸ்ரோ நிலவை நோக்கி தனது இரண்டாவது விண்கலனை அனுப்பியிருக்கும் நிலையில்,  ஏற்கனவே சந்திரயான்-1 திட்ட இயக்குனர் அண்ணாதுரை  நிகழ்ச்சி ஒன்றில் பேசியதாவது,

சந்திரயான்-1 2008ல் அனுப்பப்பட்டது. அது நிலவைச் சுற்றிவரும் வகையில் அனுப்பப்பட்டது. தொழில்நுட்ப ரீதியாக அதற்கு அடுத்த கட்டம் என்பது நிலவில் மெதுவாக தரையிறங்குவது. அந்த வகையில் சந்திரயான் ஒன்றின் அடுத்த கட்டம்தான் சந்திரயான் – 2. நாற்பது, ஐம்பது ஆண்டு களுக்கு முன்பாகவே நிலவில் இறங்கி ஆராய்ச்சி செய்தார்கள் என்றாலும்கூட, அவர்கள் அதன் மத்திய ரேகைப் பகுதியில் இறங்கித்தான் ஆய்வுசெய்தார்கள். அங்கு ஏதும் இல்லையென விட்டுவிட்டார்கள்.

இப்போது நாம் திரும்பவும் இந்த ஆய்வில் இறங்குகிறோம் என்றால், அதற்குக் காரணம் நிலவின் துருவப் பகுதிகளில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்திருப்பதுதான். தற்போது அனுப்பப்பட்டுள்ள சந்திரயான்-2 வெற்றி என்பது செப். 7-ம் தேதி தான் தெரியும் என்று கூறினார்.

மேலும்,  நிலவிற்கு மனிதன் செல்ல சர்வதேச அளவில் 4 வருடங்களாக ஆய்வு நடைபெற்று வருகிறது  என்றவர்,  உலகம் அழியும் நிலையில் மனித இனத்தை காப்பாற்றும் இடமாக நிலவு இருக்கும் என்று மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.