சண்டிகர்:

ந்தி நடிகர் ராகுல் போஸ்ஸிடம் இருந்து 2 வாழைப்பழத்துக்கு 442 ரூபாய் பில் வசூல் செய்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஓட்டல் மீது விசாரணை நடத்த சண்டிகர் மாநில காவல்துறை துணை ஆணையர்  விசாரணை நடத்த உத்தரவிட்டுஉள்ளார்.

பிரபல இந்தி நடிகர் ராகுல் போஸ் சமீபத்தில் சண்டிகரில் உள்ள 5 ஸ்டார் ஓட்டலில் தங்கினார்.  அப்போது சாப்பிடுவதற்காக  2 வாழைப்பழம் தேவை என  ஓட்டலில் ஆர்டர் செய்துள்ளார். அதைத்தொடர்ந்து, அவரது அறைக்கு  2 வாழைப்பழத்தொடு வந்த ஓட்டல் ஊழியர் 2 வாழைப்பழத்தையும், அதற்குண்டான பில்லையும் டேபிளில் வைத்துவிட்டு சென்று விட்டார்.

பில்லைக் கவனித்த ராகுல் போஸ் அதிர்ச்சி அடைந்தார். அதிகப்பட்சமாக ஒரு வாழைப்பழம் 10 ரூபாய் இருக்கும், அதே வேளையில் 5 நட்சத்திர ஓட்டல் என்பதால் ரூ.50 இருக்கலாம் என்று நினைத்தவருக்கு, பில்லில் ஜிஎஸ்டி வரி 67.50 உடன் ரூ.442.50 என குறிப்பிடப்பட்டிருந்தை கண்டதும் தலை சுற்றியது.

இது குறித்து, தனது டிவிட்டர் பக்கத்தில் வீடியோ பதிவிட்டிருந்தார். இந்த வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், சண்டிகர் காவல்துறை துணை ஆணையர், வாழைப்பழ விவகாரம் குறித்து உயர்மட்ட அளவிலான விசாரணை நடத்த உத்தரவிட்டு உள்ளார். இதில் ஓட்டல் நிர்வாகம் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டு உள்ளது.