டில்லி

ம்ரபாலி நிறுவனம் கிரிக்கெட் வீரர் தோனியின் மனைவியின் நிறுவனம் மூலம் நிதி  மோசடி செய்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

பிரபல கட்டுமான  நிறுவனமான அம்ரபாலி நிறுவனத்தின் விளம்பரதூதராக கிரிக்கெட் வீரர் தோனி நியமிக்கப்பட்டிருந்தார்.  இந்த நிறுவனம் பொதுமக்களிடம் வீடு கட்டித்தருவதாக பணம் வாங்கி விட்டு கட்டித் தராமல் ஏமாற்றியது.  இதை ஒட்டி தொடரப்பட்ட வழக்கில் அம்ரபாலி நிறுவனம் குற்றம் செய்ததாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.   அத்துடன் இந்த நிறுவனம் தனது வாடிக்கையாளர்களிடம் இருந்து பெற்ற பணத்தை எவ்வாறு மாற்றியது என்பது குறித்து ஆராய உத்தரவிடப்பட்டது.

இந்த நிறுவனத்தின் விளம்பர தூதரான தோணியின் ரிதி ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மெண்ட் என்னும் நிறுவனமும் தோனியின் மனைவி சாக்‌ஷிக்கு சொந்தமான அம்ரபாலி மகி என்னும்  நிறுவனமும் அம்ரபாலி நிறுவனத்துடன் போலி ஒப்பந்தங்கள் தயாரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.  இந்த தகவலை அம்ரபாலி நிறுவனத்தை ஆராய்ந்த ஆடிட்டர்கள் உச்சநீதிமன்றத்திடம் அளித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு தோனி அம்ரபாலி நிறுவன விளம்பர தூதர் பதவியில் இருந்து விலகி உள்ளார்.  ஆனால் அதற்கு முன்பே வாடிக்கையாளர்கள் வீடு வாங்க அளித்த  பணத்தை ரிதி நிறுவனத்துக்கு அம்ரபாலி நிறுவனம் மாறி உள்ளது.  இது ஒப்பந்த சட்டப்படி நடைபெறவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.   மேலும் ஆடிட்டர்கள் அளித்த அறிக்கையில் அம்ரபாலி நிறுவனம் மோசடி செய்ய பயன்படுத்திய நிறுவனங்கள் பட்டியலில் அம்ரபாலி மகி நிறுவனப் பெயரும் இடம் பெற்றுள்ளது.

தோனியின் மனைவி சாக்‌ஷி இது குறித்து அளித்த வாக்குமூலத்தில் தங்கள் நிறுவனம் பங்குதாரர்களிடம் இருந்து ரொக்கமாக பணத்தைப் பெற்று செலவுகளையும் ரொக்கமாகச் செய்து வந்ததாக குறிப்பிட்டிருந்தார்.   அதே நேரத்தில் ஆடிட்டர்கள் அளித்த அறிக்கையில் அம்ரபாலி நிறுவனத்துக்கும் தோனியின் மனைவியின் நிறுவனத்துக்கும் இடையில் எவ்வித புரிந்துணர்வு ஒப்பந்த நகலும் இல்லாமல் பணம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமின்றி தோனியின் ரிதி நிறுவனத்துக்கு அம்ரபாலி நிறுவனம் ரூ.42.22 கோடியைக் காரணம் காட்டாமல் அளித்துள்ளது.  அத்துடன் அம்ரபாலி நிறுவனத்துக்கும் ரிதி நிறுவனத்துக்கும் இடையில் ஒப்பந்தங்கள் மற்றும் தீர்மானம் போடப்பட்டதற்கான எவ்வித ஆதாரமும் இல்லை எனவும் தெரிய வந்துள்ளது.

அது மட்டுமின்றி தோனியின் ரிதி நிறுவனம் மூலமாக ஐபிஎல் போட்டிகளின் போது சென்னை அணியுடன் போடப்பட்டதாகக் கூறப்படும் ஒப்பந்தங்களுக்கு எவ்வித ஆதாரமும் அளிக்கப்படவில்லை.   இதனால் அம்ரபாலி நிறுவனத்துடன் இணைந்து தோனி மற்றும் அவர் மனைவியின் நிறுவனங்கள் பெருமளவில் நிதி மோசடி செய்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.