புதுடெல்லி: இந்தியாவில் வரி வருவாயில் ஏற்படும் பற்றாக்குறை காரணமாக, வெளியில் தெரியாத நிதியாதார சிக்கலில் நாடு மாட்டிக்கொண்டுள்ளது என்று தெரிவித்துள்ளார் ரதின் ராய்.
பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் கவுன்லின் உறுப்பினராக உள்ளவர்தான் இந்த ரதின் ராய்.
இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது, “வரி வருவாயில் ஏற்படும் பற்றாக்குறையே இந்த பொருளாதார சிக்கலுக்கான முக்கிய காரணம். ஜிஎஸ்டி வரி மற்றும் தனிநபர்களின் வருமான வரி ஆகிய இரண்டும் இதில் பங்கு வகிக்கின்றன.
நடப்பு நிதியாண்டில், வரி வருவாயாக ரூ.25.53 லட்சம் கோடியை திரட்டுவது என்று அரசின் நிதிநிலை அறிக்கை தெரிவிக்கிறது. என்னுடைய தொழில்திறன் சார்ந்த கணிப்பின்படி, 2019-20ம் நிதியாண்டில், திட்டமிட்ட அளவில் வரி வருவாய் ஆதாரத்தை திரட்டிவிட முடியாது.
எனவே, நாம் அதிகம் கடன் வாங்க வேண்டியிருக்கும் அல்லது செலவுகளை அதற்கேற்ப குறைத்துக்கொள்ள வேண்டியிருக்கும். அதிகம் கடன்வாங்கினால், அது ஒட்டுமொத்த பொருளாதாரத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அதேசமயம், செலவுகளை அதிகமாக குறைத்தாலும் பொருளாதாரத்திற்கு பாதிப்புதான். மொத்தத்தில் இந்தியா ஒரு வெளியில் தெரியாத பொருளாதார சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளது” என்றுள்ளார் ராய்.