வாஷிங்டன்

மெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா வரும் 2024 ஆம் வருடம் ஒரு பெண்ணையும் அவருடன் ஒரு ஆணையும் அனுப்ப முடிவு செய்துள்ளது.

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா கடந்த 1969 ஆம் வருடம் நிலவுக்கு மனிதனை அனுப்பி சாதனை புரிந்தது. நிலவில் முதன் முதலில் காலடி வைத்தவர் என்னும் பெருமையை அமெரிக்க விண்வெளி வீரர் ஆம்ஸ்டிராங் பெற்றார். இந்த நிகழ்வு முடிந்து 50 ஆண்டுகள் நிறைவு பெற்றதை ஒட்டி மீண்டும் நிலவுக்கு மனிதர்களை அனுப்ப நாசா திடம்மிட்டுள்ளது.

நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மனிதன் நிலவில் கால் பதித்து 50 ஆண்டுகள் ஆகிவிட்டது. உலக மக்கள் அனைவரும் அதைக் கொண்டாடி வருகின்றனர். நிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்ப வேண்டும் என்று முடிவு செய்துள்ளோம். இந்தத் திட்டத்துக்கு ஆர்டெமிஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. இத்திட்டம் மூலமாக, நிலவுக்கு முதல்முறையாக விண்வெளி வீராங்கனை ஒருவர் அனுப்பப்படவுள்ளார்.

அந்த பெண்ணுடன் விண்வெளி வீரர் ஒருவரும் அனுப்பப்படவுள்ளார். இவ்வாறு மீண்டும் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சி, செவ்வாய்க் கிரகத்துக்கு மீண்டும் செயற்கைக்கோள் அனுப்ப எங்களுக்கு உந்து சக்தியாக இருக்கும். இதுவரை யாரும் செல்லாத, ஆய்வு செய்யப்படாத நிலவுப் பகுதியில் ஆய்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டம் பிரபஞ்சத்தில் உள்ள பல மர்மங்களைக் கண்டுபிடிக்க உதவியாக இருக்கும். நாங்கள் இந்த திட்டத்தை நிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்புவதை நோக்கமாகக் கொண்டு செயல்படுத்த நினைக்கவில்லை. மாறாக செவ்வாய்க் கிரகத்துக்கு மீண்டும் செல்வதற்கான தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றின் சோதனை முயற்சியாக இந்தத் திட்டம் இருக்கும். இந்த திட்டத்தின்மூலம் நிலவில் இருக்கும் நீர், பனிக்கட்டி மற்றும் இதர இயற்கை வளங்கள் குறித்துத் தெரிய வரும்” என கூறப்பட்டுள்ளது.