பெங்களூரு: வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான் – 2 திட்டத்தில் முக்கியப் பங்காற்றிய விஞ்ஞானிகள் குறித்த விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

சந்திரயான் – 2 திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்படுவதற்கு முன்பாக, இவர்கள் பற்றிய விபரங்கள் அதிகம் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இத்திட்டத்தின் இயக்குநராக பணியாற்றியவர் யூ.ஆர்.ராவ் செயற்கைக்கோள் மையத்தைச் சேர்ந்த முத்தையா வனிதா என்ற பெண்மணி. இவர் ஏற்கனவே Cartosat-1, Oceansat-2 மற்றும் Megha-Tropiques ஆகிய திட்டங்களில் பணியாற்றியவர்.

இவருக்கு மிகவும் உதவிகரமாக இருந்தவர் USRC நிறுவனத்தைச் சேர்ந்த ரிது கரிதல் என்ற இன்னொரு பெண்மணி. இவர்தான் மிஷன் இயக்குநர். பெங்களூர் ஐஐஎஸ்சி கல்வி நிறுவனத்தில் பயின்றவர் இவர். கடந்த 2013ம் ஆண்டின் செவ்வாய் சுற்றுப்பாதை திட்டத்தில் பங்கேற்றவர்.

இவர்கள் தவிர, எஸ்.ராஜராஜன், ஜெயப்பிரகாஷ், எஸ்.சோம்நாத், பி.குன்ஹிகிருஷ்ணன் மற்றும் வி.வி.சீனிவாசன் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு ஆராய்ச்சி நிறுவனங்களைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இந்த வெற்றிகரமான திட்டத்தில் பங்காற்றியுள்ளனர்.