சேலம்:
சென்னை சேலம் எக்ஸ்பிரஸ் ஹைவேக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மக்கள் மனமுவந்து நிலங்களை கொடுக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழகத்தில், தொழில் வளம் பெருக சாலை உள்கட்டமைப்பு மிகவும் அவசியம், எனவே, மக்கள் மனமுவந்து நிலங்களை கொடுக்க முன்வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
நேற்று சேலத்தில் கொங்கணாபுரம் அருகே ரூ.5.20 கோடி மதிப்பிலான 2 புதிய பாலங்கள், தாரமங்கலம் புறவழிச்சாலையை திறந்து வைத்த முதல்வர், புறவழிச்சாலையில் கொடி அசைத்து பஸ் போக்குவரத்தை முதலமைச்சர் துவக்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய முதல்வர், ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு சாலை உள்கட்டமைப்பு என்பது மிகமுக்கியமான ஒன்றாகும். எந்தவொரு மாநிலத்தில் சாலை உள்கட்டமைப்பு சிறந்திருக் கின்றதோ அந்த மாநிலம் தொழில் வளம் சிறந்த மாநிலமாக இருக்கும். எனவே, நம்முடைய தமிழ்நாடு சாலை மேம்பாடு இந்தியாவிலேயே சிறந்து விளங்கியிருக்கின்றது.
சிறந்த உள்கட்டமைப்பு உள்ள மாநிலம் என்று சொன்னால் அது தமிழ்நாடு என்று பெயர் சொல்கின்ற அளவிற்கு அம்மா முதலமைச்சராக இருந்த காலத்திலிருந்து இன்று வரை சாலைப் பராமரிப்பில் இந்தியாவிலேயே முதலிடம் வகிக்கின்ற மாநிலம் தமிழ்நாடு.
தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் மூலமாக, ரோடு செக்டர் திட்டம் (road sector project) மூலமாக திருச்செங்கோடு, சங்ககிரி, கொங்கணாபுரம், தாரமங்கலம், ஓமலூர் வரை நான்கு வழிச்சாலையாக விரிவுபடுத்தி போக்குவரத்து நெரிசலற்ற சாலையாக உருவாக்கித் தரப்படும்.
அதுபோல ஓமலூர்–மேச்சேரி சாலையில் ஓமலூர் முதல் மேச்சேரி வரை 14.6 கிலோமீட்டர் நீளத்திற்கு 4 வழிச் சாலையாக விரிவுபடுத்தப்படும். பவானி–மேட்டூர், மேட்டூர்–தொப்பூர் பகுதிகளில் செல்கின்ற வாகனங்கள் தங்குதடையின்றி செல்வதற்கு அம்மாவின் அரசு அந்தச் சாலைகளையும் விரிவுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ள உள்ளது.
சாலை அமைக்கும்பொழுது, நிலம் கையகப்படுத்துவதில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதால், மக்கள் மனமுவந்து நிலம் கொடுத்தால் தான் இது போன்ற சாலைகளை அமைத்து, விபத்து, விலைமதிக்க முடியாத உயிர்ச் சேதம், பயண நேரம் ஆகியவற்றை குறைக்க முடியும் இதன் காரணமாக வாகனத்தின் எரிபொருள் மிச்சப்படும் என்றார்.
இது மக்களின் அரசு, விவசாயிகளின் அரசு, அம்மாவினுடைய அரசு விவசாயிகளின் நலனை தலையாய கடமையாகக் கொண்டிருக்கின்றது. மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கின்ற அரசு அம்மாவினுடைய அரசு என்பதை சுட்டிக்காட்டி, அனைவரும் அரசுக்கு துணை நின்று, இவ்வரசின் திட்டங்களுக்குத் துணை நின்று மக்களுக்கு நேரடியாகச் செல்ல நீங்கள் துணை நிற்க வேண்டும்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.