பதினைந்தே நாட்களில் 4 தங்கங்களை வென்று ஒட்டுமொத்த உலகையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார் தடகள வீராங்கனை ஹிமா தாஸ், 23.25 நொடிகளில் வென்று பார்ப்போரையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறார்.

 

செக் குடியரசின் காட்னோ நகரில் நடைபெற்ற சர்வதேச தடகள போட்டியின் 200 மீட்டர் தடகள போட்டியாளர்களுக்கான போட்டியில் வென்று, இந்தியாவின் ஹிமா தாஸ் 4வது தங்கத்தை கைப்பற்றியுள்ளார். கடந்த பதினைந்து நாட்களில் நான்கு தங்கங்களை வென்றுள்ள ஹிமா தாஸ், இதர நாட்டு வீராங்கனைகளை ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ளார்.

இந்த 200 மீட்டர் தடகள போட்டியில் 23.25 நொடிகளில் ஹீமா தாஸ் வெற்றி பெற்றுள்ளார். ஓப்போட்டியில் அவரை தவிற்த்து மற்ற அனைவருமே செக் குடியரசின் அமைப்புகளை சேர்ந்த வீராங்கனைகள் என்பதால், கடும் போட்டியாளராக மற்ற வீராங்கனைகளால் பார்க்கப்பட்டார். இவருக்கு அடுத்தபடியாக வி.கே விஸ்மயா 23.43 நொடிகளில் போட்டியை முடித்து, 2வது இடத்தை பெற்றிருக்கிறார்.

19 வயதே ஆன ஹிமா, கடந்த ஜூலை 2ம் தேதியிலிருந்து 4 தங்கங்களை தொடர்ந்து வென்றிருக்கிறார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் போலாந்தில் நடைபெற்ற தடகள போட்டியிலிருந்து துவங்கி, தனது ஓட்டத்தின் வேகத்தை ஹீமா அதிகரித்துள்ளார். ஜூலை 2ம் தேதி நடந்த தடகள போட்டியில் 23.65 நொடிகளில் 200 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டியில் வென்று சாதித்த ஹீமா, 7ம் தேதி போட்டியில் 23.97 நொடிகளில் வென்று சாதித்தார்.

கடந்த 13ம் தேதி செக் குடியரசின் காட்னோ நகரில் நடைபெற்ற போட்டியில் 23.43 நொடிகளில் வென்று 3 தங்கங்களை அடுத்தடுத்து வென்ற ஹிமா, தற்போது 4வது தங்கத்தை வென்றிருக்கிறார்.

ஹிமாவுக்கு மிகவும் பிடித்தமான 400 மீட்டர் ஓட்டப்பந்தய வீராங்கனை பட்டியலுக்கு விரைவில் அவர் தேர்வாவார் என்று தெரிகிறது. உலக சாம்பியன்ஷிப்களுக்கு 200 மீட்டருக்கு 23.02 நொடிகளுக்குள் ஓடவேண்டும், 400 மீட்டருக்கு 51.80 நொடிகளுக்குள் ஓடவேண்டும் என்பதே தகுதியாக உள்ளது.

இது ஒருபுறம் இருக்க, ஆண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முகமது அனாஸ், 45.40 நொடிகளில், வெற்றிக்கோட்டை கடந்தார். அவருக்கு அடுத்தபடியாக நோஹா நிர்மல் 46.59 நொடிகளிலும், கே.எஸ் ஜீவன் 46.60 நொடிகளிலும், எம்.பி ஜபீர் 47.16 நொடிகளிலும் போட்டியை முடித்துள்ளனர்.