பெங்களூரு:

காவிரி மேலாண்மைஆணையம், தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு  உத்தரவிட்டும் தண்ணீர் திறக்காத கர்நாடக அரசு, தற்போது அங்கு பெய்து வரும் கனமழை காரணமாக காவிரியில் தண்ணீர் திறந்து விட்டுள்ளது.

கர்நாடக முதல்வர் குமாரசாமி உத்தரவுப்படி கபினி அணையில் இருந்து 500 கனஅடி தண்ணீரும், கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து 355 கனஅடி தண்ணீரும் திறந்து விடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த மாதம் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில், தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, காவிரியில் தண்ணீர் திறந்து விடும்படி கர்நாடக அரசுக்கு ஆணையம் உத்தரவிட்டது. ஆனால்,  காவிரியில் தண்ணீர் திறந்து விடப்படும் என முதல்வர் குமாரசாமி கூறிய நிலையில் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படாமலேயே இருந்து வந்தது.

தற்போது காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்து வருவதாலும், கர்நாடக அணைகள் நிரம்பி வருவதாலும்,  கிருஷ்ண ராஜசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பது குறித்து நீர்ப்பாசன துறை அதிகாரிகளுடன் அமைச்சர் புட்டர்ராஜூ ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, முதல்வர் குமாரசாமி உத்தரவுப்படி கபினி அணையில் இருந்து 500 கனஅடியும், கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து 355 கனஅடியும் தண்ணீர் இன்று அதிகாலையில் இருந்து  காவிரி ஆற்றில் திறந்து விடப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

[youtube-feed feed=1]