சென்னை
நடந்து முடிந்த முதல் சுற்று கலந்தாய்வின் படி மருத்துவக் கல்வி சேர்க்கைக்கான கட் ஆஃப் மதிப்பெண்கள் 100 வரை அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது.
மருத்துவக் கல்வி பட்டப்படிப்புக்கான சேர்க்கை மாநில அரசு குழுவின் கலந்தாய்வு மூலம் நடைபெற்று வருகிறது. இந்த கலந்தாய்வில் நீட் மதிப்பெண்கள் மற்றும் 69% இட ஒதுக்கீடு ஆகியவைகள் அடிப்படையில் இடம் ஒதுக்க ப்படுகிறது. ஏற்கனவே முதல் சுற்று கலந்தாய்வு முடிவடைந்துள்ளது. இதில் அரசு ஒதுக்கீட்டுக்கான 3968 இடங்கள் நிரப்பட்டுள்ளன.
அத்துடன் பல் மருத்துவத்தில் அரசு கல்லூரிகளில் உள்ள அனைத்து இடங்களும் நிரப்பட்டுள்ளன. சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் பல் மருத்துவத்துக்காக அரசுக்கு 908 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த இடங்கள் இன்னும் நிரப்ப படாமல் உள்ளன. இவற்றை தவிர வேலூர் கிறித்துவ மருத்துவ கல்லூரி மற்றும் ஐ ஆர் டி மருத்துவக் கல்லூரிக்கான நிர்வாக ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு வரும் ஞாயிறு அன்று நடைபெற உள்ளது.
இம்முறை அதிகார பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும் சேர்க்கைக்கான கட் ஆஃப் மதிப்பெண்கள் உயர்த்தப்பட்டுள்ளது கலந்தாய்வின் முடிவின் மூலம் தெரிய வந்துள்ளது. பொதுப் பிரிவின் கீழ் அரசு கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்பட்ட மாணவர்களின் கட் ஆஃப் மார்க்குகள் 525 ஆக உள்ளன. சென்ற வருடம் இது 430 ஆக இருந்துள்ளது.
இதைப் போல் பின் தங்கியோருக்கான இட ஒதுக்கீட்டில் கட் ஆஃப் மதிப்பெண்கள் 474 ஆகி உள்ளது. சென்ற வருடம் இந்த மதிப்பெண் 375ஆக இருந்தது. மொத்தத்தில் இந்த கட் ஆஃப் மதிப்பெண் உயர்வு கிட்டத்தட்ட 100 வரை அதிகரித்துள்ளது.
இந்த உயர்வு மிகவும் பிற்படுத்தப் பட்டோர், தலித்துகள், பழங்குடியினர் ஆகிய பிரிவுகளுக்கும் 112 வரை உயர்ந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் இந்த வருடம் மாணவர்கள் அதிக அளவில் மதிப்பெண்கள் பெற்று நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்தது என தேர்வுக் குழுவின்ர் தெரிவித்துள்ளனர்.