நவீன விஞ்ஞான மருத்துவ முறையில் மட்டும் ,
அவசியமற்ற மருத்துவம் ,
அதீத மருந்து உபயோகம் ,
இது உண்மையா ??

Dr.Safi, Nagercoil

இன்று

இந்த இரு புகைப்படத்தையும் முகநூலில் பார்க்க நேர்ந்தது ,

மருத்துவம் பற்றியும் , வாழ்க்கை முறை மாற்றம் பற்றியும் , அவசியமற்ற மருந்து பிரயோகம் பற்றியும் குறிப்பிட்டிருக்கிறது , உண்மைதான் ,

முதலில் மக்கள் மாத்திரைக்காகவும் , அறுவைசிகிச்சைக்காகவும் வரிசையில் நிற்கும் புகைப்படம் பற்றி பார்ப்போம் , இந்த புகைப்படம் கூறும் செய்தி உண்மையே, உதாரணம் ,

சர்க்கரை நோய் ,

என்னிடம் சர்க்கரை நோய் பாதித்து வரும் ஒவ்வொரு நோயாளியும் , ஆரம்ப நிலையில் , சர்க்கரை அளவும் , சர்க்கரை பாதிப்பு நிலையும் முதல் கட்டத்தில் இருக்குமே ஆனால் , நான் மட்டுமல்ல , நவீன விஞ்ஞான மருத்துவம் முறையாக படித்த எந்த மருத்துவரும் முதலில் அவருக்கு கொடுக்கும் அறிவுரை ,

உணவு கட்டுப்பாடு, வாழ்க்கை முறை மாற்றம் , மருந்தற்ற வாழ்வியல் ,

இதுதான் ( ADA) எனும் அமெரிக்க சர்க்கரை நோய் சங்கம் உட்பட அனைத்து நீரிழிவு நோய் அமைப்புகளின் கொள்கை முடிவு,

அதில் பல வகையான ஆகார முறை மாற்றம், முறையான உடற்பயிற்சி , திடமான வாழ்வியல் மாற்றங்கள் ( புகை ,மது, கெட்ட பழக்க கைவிடுதல் )  என அனைத்து முறையையும் வழிவகுத்து கொடுத்து , அடுத்து , தொடர்ச்சியான மருத்துவ ஆலோசனை பெறவும் அறிவுறுத்துவோம் ,

எத்தனை பேர் ,? எத்தனை நாள் ? , எவ்வளவு பொறுப்புடன் ,எவ்வித நோய் விழிப்புணர்வுடன் இதை பின்பற்றுவர் ??

10 பேரில் ஒருவர் கூட மேற்கூறியவற்றை சரியாக பின்பற்றுவது பொதுவாக கிடையாது ,

மாறாக ,

நாம் கூறிய அறிவுரைகளை புறந்தள்ளி  நாட்டு மருந்து , கை மருந்து , ஹோமியோ,சித்தா, அருகம்புல், வேப்பம்பூ, நாவல்பழம், கொய்யா இலை சாறு, பாகற்காய் கூட்டு , ஆன்லைனில் உணவு ஆலோசனை , கண்டவரெல்லாம் சொல்லும் வாட்சப் டயட் ஆலோசனை , முறையற்ற உணவு பரிந்துரைகள்  என கேட்பார் பேச்செல்லாம் கேட்டு , இவை அனைத்தையும் உண்டு , இதனுடன்  அதிகமான மாவுணவு , அதீத கெட்ட கொழுப்புணவு , உடலுழைப்பின்மை , வாழ்வியலில் எந்த மாற்றமும் செய்யாமல், குடியும் ,சிகரெட்டும் ,சீக்ரெட்டுமாய் வாழ்க்கையை ஜம்பமாய் ஓட்டுவர் ,

பிறகு அடுத்தென்ன ????

சுகர் சூப்பராய் தலை தூக்கும் , கை கால் மறுத்துப்போக ஆரம்பிக்கும் , சிறுநீர் தொற்று வரும் , கால்களில் வறட்சி, ஆறாத புண் , அஜீரணம் , உடல் அரித்தல் என ஒவ்வொன்றாய் ஆரம்பிக்கும் , அதற்கும் சரி , தேவையற்ற பல வீட்டு ,நாட்டு வைத்தியங்களை தொடர்வோர் தாம் அதிகம் ,
பின்னர் ,

150 ல் வந்து மருத்துவரை கண்டு உணவு மற்றும் உடலுழைப்பு  ஆலோசனை பெற்ற அதே நபர் 300+ கொண்ட சுகரோடு பல்லிளித்துக்கொண்டு ,ஆனாலும் தம் தவறை ஒப்புக்கொள்ளும் மனமில்லாமல் வந்து அப்போதும் கேட்பார் ,

மருந்து இல்லாம ஏதாவது வழி சொல்லுங்க சார் !!!??
இனிமேல் கரெக்டா பாலோ செய்றேன் என்பார் …!!!!

ஆனால்….

அந்த நோயின் நிலை பற்றி அறிந்த எந்த மருத்துவனும் , ஒரு நோயாளியை வெறுமனே மருந்தில்லமல் அனுப்பிட முடியாது , அது அவன் மாண்புமிக்க தொழிலுக்கு செய்யும் துரோகம் , அப்படி மருந்து தர ஆரம்பிக்கையில் ,

நிற்க ..

அடுத்த புகைப்படம் பார்க்கவும் ,

இதில் நான் மேலே சொன்ன விடயங்களை சேர்த்துக்கொண்டு படிக்கவும் ,

சரி ,

அதே மருத்துவர்

மருந்து தராமல் 300க்கும்  மேல் உள்ள சர்க்கரையை உணவுகட்டுப்பாடு மூலம் மாற்ற உதவுகிறார் நம் ஆசாமி என்ன செய்வார் ??

வழக்கம் போல தான் … எந்த பொறுப்பும் இன்றி தம் வாடிக்கையான வாழ்க்கையை தொடர்வார் ,

சர்க்கரை கூடும் , ரத்த குழாய்கள் சேதமடையும் , தோல் மற்றும்.சருமம் வெடிப்படைந்து மோசமாகும் , வயிற்றின் அனைத்து செரிமான வேலையும் தடைபடும் , உடலின் உறுப்புக்கள் அனைத்தும் படிப்படியாக பலவீனப்படும் , சிறுநீரக கழிவு உடலில் தேங்க ஆரம்பிக்கும் , மெதுவாக மிகவும் மோசமான நிலைக்கு அம்மானிடன் பயணித்துக்கொண்டிருக்க , கடைசியில் ஒரு நாள் மீளாத சர்க்கரை நோயின் விளைவு நோய்களான, கண், இருதயம், மூளை, சிறுநீரகம், கை.கால் எலும்பு,  கல்லீரல் , ஏன்  ஆண்மை குறைவு என்பது கூட சர்வ சாதாரணமாக விளைவாக மாறும் ,

இப்போது அவரை சுற்றி ஒரு உபதேச , நல்ல , தூய உள்ளங்கள் சேரும் ,
சேர்ந்து , ஒன்றாக , ஒத்தகுரலாய்   சொல்லும்

டாக்டர் ஒழுங்கா பாக்கல !!
தேவையான மருந்து தரல !!
திறமையற்ற டாக்டர் ,
அனுபவமற்ற மருத்துவர் ,

அவரிடம் போயிருக்கலாம் ,
ஹீலர் காப்பாத்தியிருப்பார் ,
ரெய்க்கி குணப்படுத்தி இருக்கும் ,
ஹோமியோ தான் பெஸ்ட்,

இது தான் …
இந்த சுழற் மடமையான தகவல் பரப்புரைகள் தான்

இன்று பல நோய்களுக்கு இத்தனை மருந்துகளும் ,மருத்துவர்களும் , மருத்துவமுறைகளும் வர முதன்காரணம் , நோய் விழிப்புணர்வு, நோய் கண்டறிதல், நோய் , அதன் மருத்துவம் புரிதல், நோய் கட்டுப்படுத்துதல், நோய்க்கு முறையான மருத்துவம் பேணுதல் , நோய்க்கான மருத்துவத்தை தொடர்தல் , நோய் கட்டுப்படுத்தி உயிர் காத்தல் , மேலே சொன்ன ஒவ்வொரு விஷயமாய் பார்த்து வாருங்கள் , ஒவ்வொரு விஷயத்தை நீங்கள் புறக்கணிக்க  , அலட்சியம் செய்ய ,செய்ய

ஒவ்வொரு மருந்தாய் கூடும் ,
ஒவ்வொரு சிகிச்சை மாறும்,
அறுவை சிகிச்சை தேவைப்படும் ,
விளைவு நோய்கள் ஆரம்பிக்கும் ,
விளைவு நோய்கள் முற்றும் ,
அதற்கு தேவையான சிகிச்சைகள் , மருந்துகள் கூடும் ,

சாதாரணமாய் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டிய நோய் , வாழ்நாள் துணைநோயாய் இறக்கும் வரை  கூடவே பயணிக்கும் ,  காரணம் , நோயாளியின் இந்த மனநிலை , நோயாளியின் இந்த அலட்சியம் , நோயாளியின் இந்த அறியாமை ,

ஆக..

இதற்கும்  மருத்துவருக்கும் , மருத்துவமுறைக்கும் என்ன தொடர்பு ???

இந்த உதாரணம் பொதுவாய் அனைத்து வயதில் வரும் நோய்க்கும் பொருந்தும் , தாய்ப்பால் தர சொல்லி அறிவுறுத்திய தாய்  தம் குழந்தைக்கு , தன் சோம்பேரித்தனத்தால் புட்டிப்பால் ஆரம்பித்து , காதில் சீழ் , நிமோனியா , மூளை காய்ச்சல் , தொண்டை டான்சில் என அனைத்தும் வந்து அதற்கான மருத்துவம் ,அறுவை சிகிச்சை என அலைவதை கூட உதாரணமாய் எடுத்துக்கொள்ளலாம் .

இப்படி நவீன விஞ்ஞான மருத்துவர்கள் தரும் முதல் எச்சரிக்கை  அறிவுரைகள் ,  இறைவன் தரும் நோய்காக்கும் தவணைகள் என அனைத்தையும் அலட்சியப்படுத்துவது  யார் ??? இதுபோன்ற புகைப்படங்களை பரப்புவிடும் நம்மவர்கள் தானே…!!!!

நோய் கண்டறிவோம் ,
நோய் புரிவோம்,
நோய்க்கான சிகிச்சை அறிவோம் ,
நோய் கட்டுப்படுத்துவோம் ,
நோயற்ற வாழ்வை வாழ முயல்வோம்

-Dr.Safi, Nagercoil