சென்னை:

சென்னை பெருங்குடி பகுதியில் உள்ள கல்குட்டை  குளத்தை பொதுமக்கள் உதவியுடன்  ஆய்வுச் செய்ய சென்ற அறப்போர் இயக்க நிர்வாகிகள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது, அவர்கள் திருமண மண்டபம் ஒன்றில் அடைத்து வைக்கப்பட்டு உள்ளனர்.

சென்னையில் தலைவிரித்தாடும் தண்ணீர் பிரச்சினை எதிரொலியாக பல இடங்களில் உள்ள குளம் குட்டைகள் சமூக ஆர்வலர்கள், சமுதாய அமைப்புகள் மற்றும் பொதுமக்களால் தூர் வாரப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பெருங்குடி பகுதியில் உள்ள கல்லுகுட்டை எனப்படும், குளம் குறித்து ஆய்வு செய்யப்போவதாக அறப்போர் இயக்கம் ஏற்கனவே துண்டுபிரசுரம் விநியோகம் செய்து பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்திருந்தது. அதைத் தொடர்ந்து இன்று அங்கு சென்ற அறப்போர் இயக்க நிர்வாகிகளை போலீசார் கைது செய்து அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.

இதுகுறித்து கூறிய அறப்போர் நிர்வாகிகள், கடந்த 2015ம் ஆண்டு  ஏற்பட்ட வெள்ளத்திற்கு காரணம் குறித்து ஆய்வு செய்து வருவதாகவும், அதன்படி இன்று கல்லுக்குட்டை பகுதியில் ஆய்வு செய்ய வந்தாகவும், ஆனால், காவல்துறையினர் தங்களை கைது செய்து அழைத்துச்சென்றுள்ளதாகவும் தெரிவித்து உள்ளனர்.