சேலம்:

சேலம் தொகுதி திமுக  எம்பி பார்த்திபன் மீது கொலை மிரட்டல் உள்பட  4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம் பெரியசாத்தப்பாடி கிராமத்தில் வனத்துறைக்கு சொந்தமான அரசு நிலமான கரடு பகுதியை திமுக எம்பி பார்த்திபன் ஆக்கிரமித்துள்ளதாகவும்  இதன் காரணமாக,  அந்த பகுதியில்  உள்ள  விளை நிலங்களுக்கு செல்ல அந்த பகுதி மக்களுக்கு அனுமதி மறுக்கப்படு வதாக புகார் எழுந்துள்ளது.

மேலும் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் உள்ள மலையை உடைத்து மணலை எடுத்து விற்பனை செய்து வருவதாகவும், வனப்பகுதியில் உள்ள மரங்களை வெட்டி விற்பனை செய்வதாகவும் அவர் மீது புகார் எழுந்துள்ளது

இது தொடர்பாக ஏற்கனவே பிரச்சினைகள் இருந்து வந்த நிலையில், தற்போது, கரடு பகுதியில் உள்ள விளை நிலைங்களுக்கு செல்லும் மக்களை மிரட்டுவதாகவும், கொலை மிரட்டல் விடுவதாகவும்  அங்குள்ள மக்கள் பார்த்திபன் எம்.பி. மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதுகுறித்து விசாரணை நடத்திய  மேச்சேரி காவல் நிலைய அதிகாரி, திமுக எம்பி எஸ்.ஆர். பார்த்திபன், அவரது சகோதரர் அசோக்குமார், அனந்த பத்மநாபன், காவலாளி பழனிசாமி ஆகியோர் மீது அரசு சொத்துக்களை திருடுதல், கொலை மிரட்டல், அத்து மீறி நுழைதல் உள்ளிட்ட 4 பிரிவு களின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.