டில்லி:
சபாநாயகர் உத்தரவுக்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்த கர்நாடக மாநில அதிருப்தி எம்எல்ஏக்கள், இன்று மாலை 6 மணிக்குள் சபாநாயகரை சந்திக்க வேண்டும் என்று உச்சநீதி மன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது.
இதன் காரணமாக, மும்பை ஓட்டலில் பாரதிய ஜனதா கட்சியினரால் சிறை வைக்கப்பட்டுள்ள அதிருப்தி எம்எல்ஏக்கள் அனைவரும் சிறப்பு விமானம் மூலம் உடனே பெங்களூரு திரும்புகின்ற னர்.
கர்நாடகத்தில் ஆட்சி செய்து வரும் காங்கிரஸ் ஜேடிஎஸ் கூட்டணி அரசை கவிழ்க்க பாரதிய ஜனதா கட்சி பல்வேறு முயற்சிகளை எடுத்து வரும் நிலையில், சமீபத்தில், காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியை சேர்ந்த 14 எம்எல்ஏக்கள், தங்களது எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்வதாக சபாநாயகருக்கு கடிதம் அனுப்பிவிட்டு, மும்பை சென்றனர். அங்கு பாஜகவினரின் கட்டுப்பாட்டில் இருந்து வருகின்றனர்.
எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதங்களை பரிசீலித்த சபாநாயகர் ரமேஷ், ராஜினாமா கடிதங்கள் சட்டப்படி இல்லை என கூறி, ஏற்க மறுத்ததுடன், தன்னிடம் நேரில் வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
இதையடுத்து, சபாநாயகர் உத்தரவை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் அதிருப்தி எம்எல்ஏக்கள் சார்பில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுமீதான விசாரணை இன்று நடைபெற்றது.
தலைமை நீதிபதி தீபக் குப்தா மற்றும் அனிருத்தா போஸ் அமர்வில் விசாரணை நடைபெற்றது. விசாரணையின்போது, மனுதாரர்களுக்காக ஆஜரான முகுல் ரோஹத்கி கிட்டத்தட்ட 15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாகவும், அவர்களின் ராஜினாமாக்களை சபாநாயகர் எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூற முடியும் என்று கேள்வி எழுப்பினார். சபாநாயகர் அறிவிப்பு காரணமாக மேலும் பலர் ராஜினாமா செய்வதில் இருந்து, பின்வாங்குகிறார்கள் என்று வாதாடினார்.
விசாரணையை தொடர்ந்து,எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரம் குறித்து பதில் அளிக்க கர்நாடக சபாநாயகர் அலுவலகத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதுடன், ராஜினாமா கடிதம் கொடுத்த எம்எல்ஏக்கள் 10 பேரும் இன்று மாலை 6 மணிக்குள் சபாநாயகர் முன்பு ஆஜராக வேண்டும் என்றும், சபாநாயகர் அவர்கள் கடிதம் குறித்து நடவடிக்கை எடுப்பார் என்று கூறிய நிலையில், கர்நாடகா மாநில டிஜிபி, அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு தேவையான பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு உள்ளது.