புதுடெல்லி: ஒப்பந்தப்படி முடிக்கப்படாத கட்டுமானத் திட்டங்கள் விஷயத்தில், வீடு வாங்குவதற்கான பணம் செலுத்தியவர்களுக்கு, அவர்களின் முழு பணத்தையும், தேசிய வங்கிகள் வீட்டுக் கடனுக்கு நிர்ணயிக்கும் அளவிலான வட்டியுடன் திருப்பி அளிக்க வேண்டுமென தேசிய நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
நுகர்வோர் குறைதீர்ப்பு தொடர்பாக செயல்படும் நாட்டின் உயர்ந்தபட்ச அமைப்பாகும் இது. தாங்கள் மேற்கொண்ட ஒப்பந்தப்படி வீட்டை சரியான நேரத்திற்கு வாங்க முடியாமல் பணத்தைத் திருப்பிக் கேட்கும் நுகர்வோருக்கு, நட்ட ஈட்டை வழங்குவதோடு, சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கான செலவையும் சேர்த்தே வழங்க வேண்டுமென கூறப்பட்டுள்ளது.
வீட்டிற்கான பணத்தை திருப்பியளிக்கையில், எந்த அளவிலான வட்டி வழங்குவது என்பது குறித்து, பல்வேறு நுகர்வோர் அமைப்புகள் விசாரித்த வழக்குகளில் ஒருமித்த தீர்ப்பு எட்டப்படாத நிலையில், எஸ் எம் கண்டிகர் மற்றும் தினேஷ் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு, தேசிய வங்கிகள் வீட்டுக் கடன்களுக்கு வழங்கும் வரி விகிதத்துக்கு சமமாக இருக்க வேண்டுமென தீர்ப்பு வழங்கப்பட்டது.
பஞ்சாப் மாநிலம் மொஹாலியில், வேப் கார்டன் ஹவுசிங் புராஜெக்ட் என்ற திட்டத்தில், உரிய காலத்தில் தங்களுக்கான வீடுகளைப் பெற முடியாத 20 பேர் தொடுத்த வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.