சென்னை:

ச்சநீதிமன்ற தீர்ப்புகளை தமிழிலும் வெளியிட தமிழக சட்டமன்றத்தில் சிறப்புத் தீர்மானம் இயற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தினார்.

தமிழக சட்டமன்ற மானிய கோரிக்கை கூட்டத்தொடர் கடந்த ஜூன் மாதம் 28ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. இன்று எரிசக்தி மற்றும் மதுவிலக்கு தொடர்பான கோரிக்கைகள் குறித்து விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையில், உச்சநீதி மன்ற தீர்ப்புகள் தொன்மையான  தமிழ் மொழியை தவிர்த்து 6 மாநில மொழிகளில் வெளியிடப்படும் என உச்சநீதி மன்றம் அறிவித்திருப்பது குறித்து ஸ்டாலின் பேசினார். அப்போது,  உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மாநில மொழிகளில் வெளியிட முடிவு செய்துள்ள நிலையில், அந்த பட்டியலில் உலகின் மூத்த மொழியான தமிழ் இடம்பெறவில்லை, இது தொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானம் இயற்ற வேண்டும் என்று கூறினார்.

இதற்கு பதில் அளித்துப் பேசிய சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், அரசுக்கு இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வரவில்லை ஊடகங்களில் வந்த தகவல்களின் அடிப்படையில் முதல்கட்டமாக 6 மாநில மொழிகள் பட்டியலில் உள்ளது என்றும் அவர் கூறினார்.

அதிக அளவில் வழக்கு தொடுத்துள்ள மாநிலங்களின் அடிப்படையில், 6 மாநில மொழிகள் முதல்கட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன என்றும்,  விரைவில் அதில் தமிழையும் இணைக்க அரசு நிச்சயம் முயற்சிகளை மேற்கொள்ளும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.