டில்லி:

நீதிமன்ற உத்தரவை பின்பற்ற மாட்டீர்களா; மதிக்க மாட்டீர்களா? என்று கேரள அரசுக்கு  உச்சநீதி மன்றம் கடுமையாக கண்டனம் தெரிவித்தது.

முல்லைப்பெரியாறு அணை அருகே வாகன நிறுத்துமிடம் கட்டக்கூடாது என ஏற்கனவே உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அதை மீறி கேரள அரசு வாகன நிறுத்தம் கட்டி வருகிறது. இது தொடர்பாக தமிழகஅரசு சார்பில் உச்சநீதி மன்றத்தில் முறையிடப்பட்டது.

ஏற்கனவே இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், தமிழக அரசு சார்பில், உச்சநீதி மன்ற உத்தரவை மீறி, கேரள அரசு தொடர்ந்து கட்டுமானப்பணியை மேற்கொண்டு வந்தாக தமிழக அரசு முறையிட்டது.

தொடர்ச்சியாக, வழக்கின் இன்றைய விசாரணையின்போது, முல்லைப்பெரியாறு வாகன நிறுத்துமிடம் தொடர்பாக நீதிமன்ற உத்தரவை பின்பற்ற மாட்டீர்களா? உத்தரவை மீறி எதற்காக கட்டுமானப்பணி மேற்கொள்கிறீர்கள்? என்று கடுமையாக கேள்வி எழுப்பிய நீதிபதிகள்,

இரு மாநிலத்திற்கு இடையேயான பிரச்னையில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்கமாட்டீர்களா? என பல்வேறு கேள்விகளை எழுப்பியதோடு தங்களது கண்டனத்தையும் பதிவு செய்தனர்.

மேலும், இது தொடர்பாக கேரள அரசு  15 நாளில் பதிலளிக்க வேண்டும் என  உத்தவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.