ரியோடிஜெனிரா: கடந்த ஜுன் மாத காலகட்டத்தில் மட்டும், அமேசான் மழைக் காடுகளை அழிக்கும் விகிதம் 60% அதிகரித்துள்ளது. பிரேசில் நாட்டு அதிபர் ஜேர் போல்ஸ்னோரோ அரசின் கொள்கைகள்தான் இதற்கு காரணம் என்று குற்றம் சாட்டப்படுகிறது.
அமேசான் மழைக்காடுகளில் 3ல் 2 பங்கிற்கும் மேலாக பிரேசில் நாட்டில்தான் அமைந்துள்ளது. அக்காடுகள் தற்போது விரைவாக அழிக்கப்பட்டு வருகிறது. ஜேர் போல்ஸ்னோரோ பதவியேற்ற முதல் சில மாதங்கள் காடுகளின் அழிப்பு கட்டுப்பாட்டிற்குள்தான் இருந்தது. ஆனால், கடந்த மே மற்றும் ஜுன் மாதங்களில் அந்த விகிதம் அதிகரித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
அதாவது கடந்த 2018ம் ஆண்டு ஜுன் மாதம் அழிக்கப்பட்ட அமேசான் மழைக்காட்டின் பரப்பளவு 488.4 சதுர கி.மீ. ஆனால், இந்த 2019ம் ஆண்டின் ஜுன் மாதம் அழிக்கப்பட்ட காட்டின் பரப்பளவு 769.1 சதுர கி.மீ. இந்தக் கணக்கீட்டின்படி பார்த்தால், ஒரு நாளின் ஒவ்வொரு நிமிடத்திலும் 1.5 கால்பந்து மைதானத்தின் அளவில் காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அவல நிலைக்கு பிரேசில் நாட்டின் வலதுசாரி அதிபரான ஜேர் போல்ஸ்னோரோ மற்றும் அவரின் சுற்றுச்சூழல் அமைச்சர் ஆகியோர்தான் காரணம் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். காடு அழிப்பு தொடர்பான கொள்கைகளை அதிகம் தளர்த்தியதாலேயே இந்த நிலை என்று கூறப்படுகிறது.